ஃபிட்னஸ் பிரபலம் ரேஷெல் சேஸ் காலமானார்
21 Oct,2023
வெலிங்டன்: சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலமும், பாடி பில்டருமான ரேஷெல் சேஸ் உயிரிழந்தார். 41 வயதான அவரது திடீர் மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர் உயிரிழந்த தகவலை அவரது மூத்த மகள் உறுதி செய்துள்ளார்.
உடற்பயிற்சி மற்றும் தன்னந்தனி பெண்ணாக தனது குழந்தைகளை வளர்ப்பது குறித்து உத்வேகம் அளிக்கும் வகையிலான பதிவுகளை ரேஷெல், சமூக வலைதளங்களில் பதிவு செய்வது வழக்கம். அவரை ஃபேஸ்புக் தளத்தில் மட்டுமே சுமார் 1.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வந்தனர். கடந்த 2015-ல் ரேஷெல், விவாகரத்து பெற்றார்.
சிறு வயது முதலே பாடி பில்டிங் சார்ந்து இயங்கி வரும் அவர் பல்வேறு போட்டிகளில் பரிசு வென்றுள்ளார். கடந்த 2011-ல் லாஸ் வேகாஸில் நடைபெற்ற ஒலிம்பியா பாடி பில்டிங் நிகழ்வில் அவர் பங்கேற்றார். அதன் மூலம் இந்த நிகழ்வில் பங்கேற்ற முதல் நியூஸிலாந்து பெண் என்ற சாதனையை படைத்தார். விவகாரத்துக்கு பிறகு தனது குழந்தைகளை வளர்ப்பது தனக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
“அன்பான எங்களது அம்மா எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருப்பார். எங்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவார். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்தி வந்தார். நாங்கள் அவரை இழந்து வாடுகிறோம். அன்பு என்றும் மங்காது” என அவரது மகள் தெரிவித்துள்ளார்.