திரைவடிவம் பெறுகிறது 'டைட்டன்' விபத்து.'டைட்டானிக்' போல வெற்றி பெறுமா?
04 Oct,2023
’டைட்டானிக்’ படத்தைப் போலவே ‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலின் விபத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருக்கிறது.
கடந்த 1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான 'டைட்டானிக்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைய தலைமுறை இளைஞர்களையும் கவரக்கூடிய படமாக இது இருக்கிறது.
இந்த நிலையில், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் ஆழத்தில், டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காண்பதற்காக ‘டைட்டன்’ என்ற ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம் கடந்த ஜூன் மாதம் சென்றது. அந்த நீர்மூழ்கி கப்பலில் 5 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதிக அழுத்தம் காரணமாக அந்த நீர்மூழ்கி சுற்றுலா வாகனம் உடைந்து, அதில் பயணித்த ஐந்து பேரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் அதை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனே இயக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், ஜேம்ஸ் கேமரூன் அதை மறுத்திருந்தார். ஆனால், தற்போது மைண்ட்ரியாட் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் இந்த விபத்தை படமாக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜஸ்டின் மேக்ரிகோர், ஜோனதன் கீசே திரைக்கதை எழுதுகின்றனர். படத்தை இயக்க இருப்பது யார், யாரெல்லாம் இதில் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து விரைவில் தயாரிப்புத் தரப்பு அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.