தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகவில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்தில் நடித்த சிவராஜ்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
அப்போது பேசிய சிவராஜ்குமார், காவிரி பிரச்னைகளை தீர்க்கமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபடுவது தவறு என்றும் கூறினார். நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது, ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்தில் அமைதியான முறையில் போராட வேண்டும் என்றும் சிவராஜ்குமார் கேட்டுக்கொண்டார்.
திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் ஶ்ரீநாத், ஸ்ருதி, உமாஶ்ரீ, ரகு முகர்ஜி, அனு பிரபாகர், விஜய் ராகவேந்திரா, முரளி, நீனசம் சதீஷ், பூஜா காந்தி, பாமா ஹரீஷ், அனிருத், பத்மா வசந்தி, ரூபிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில் நடிகர் நடிகர்கள் போராட்டத்தில், சிவ்ராஜ்குமார், யாஷ், தர்ஷன், சுதீப் உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதே போல பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக தலைநகர் பெங்களூரு, மாண்டியா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பேருந்துகள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின. பல்வேறு மாவட்டங்களில் தடையை மீறி கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாண்டியாவில் விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் காவிரி ஆற்றில் இறங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர், தங்களுக்கே நீர் இல்லை என்றும், தமிழகத்துக்கு எப்படி நீர் தர முடியும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர். பெங்களூருவில் உள்ள டவுன்ஹாலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டாரை போலீசார் கைது செய்தனர். அப்போது பேருந்தின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
கர்நாடக- தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிரடி படையினர் கைது செய்தனர். பெங்களூரு அடுத்த சிக்மகளூரில் சாலையை மறித்து இறுதிச்சடங்கு போராட்டம் நடத்தியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறுதிச்சடங்கு போன்று தாரை தப்பட்டை இசைத்தும், மண்பானை சுமந்தும் போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர்.
கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி அருகே கன்னட ஜாகூர்த்தி வேதிகே அமைப்பை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் விவசாயி ஒருவரை தண்ணீரால் குளிப்பாட்டி சடங்கு செய்வது போல் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பந்த் அமைதியான முறையில் நடைபெற்றதாக கூறினார்.