சாகப்போகிறேன் கூறிவிட்டு பிரபல நடிகை அபர்ணா நாயர் தற்கொலை.
02 Sep,2023
பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரமனை பகுதியை சேர்ந்தவர் அபர்ணா நாயர். 33 வயதான இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேக தீர்த்தம், அச்சாயம், கல்கி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அபர்ணாவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முந்தினம் அபர்ணா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் சஞ்சித் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அபர்ணாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவரது கணவர் சஞ்சித்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அபர்ணா தனது தாயை தொடர்புக்கொண்டு தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது கணவர் சஞ்சித்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வீட்டின் அறைக்கு சென்று பார்த்த சஞ்சித் அபர்ணா தூக்கில் தொங்கியபடி அசைவின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அபர்ணா குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.