சென்னை உலக சினிமா விழா
24 Aug,2023
சென்னை உலக சினிமா விழா என்ற பெயரில் சென்னையில் முதலாவது சர்வதேச திரைப்பட விழா செப்டம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது என இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உலக சினிமா பாஸ்கரன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், '' உலகம் முழுவதும் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்கள் ஆண்டுதோறும் நடந்தேறி வருகின்றன. இந்த விழாக்கள் ஒவ்வொன்றும் பிரத்தியேக உள்ளடக்கத்தினை இலக்காகக் கொண்டு நடைபெற்று வருகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். சென்னையிலும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதன் முதலாக சுயாதீன திரைப்படங்களுக்கான சர்வதேச திரைப்பட விழா, 'சென்னை உலக சினிமா விழா' எனும் பெயரில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது.
இத்தகைய விழா சென்னையில் நடைபெறும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1,2,3 ஆகிய திகதிகளில் மாபெரும் திரைப்பட விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
முக்கியமாக இயக்குநர் வேல்முருகன் பெரியவன் உருவாக்கிய 'அடவி' எனும் மௌன திரைப்படம் திரையிடப்படுகிறது. கலைஞரின் கதை வசனத்தில் உருவான 'பராசக்தி' எனும் திரைப்படம் திரையிடப்படுகிறது. இதுவும் ஒரு உலக சினிமா என்ற பெயரில் அந்த திரைப்படம் வெளியிடப்படுகிறது. மேலும் இந்திய மதிப்பில் 12 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்ட 'லெப்ட் ஓவர்' எனும் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளையும், விருதுகளையும் வென்றது.
இந்த விழாவில் குறைந்த முதலீட்டில் உலக அளவிலான சினிமாவை உருவாக்கும் ரகசியத்தை இயக்குநர்களும், படைப்பாளிகளும் வருகை தரும் திரைப்பட ஆர்வலர்கள் முன் பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் மூலம் குறைவான முதலீட்டில் திரைத்துறை மீது ஆர்வம் இருக்கும் நண்பர்கள் ஒன்றிணைந்து சர்வதேச அளவிலான சினிமாவை உருவாக்க இயலும் என்ற நம்பிக்கையை விதைக்கவிருக்கிறோம். இந்த விழாவில் பங்குபற்ற நுழைவு கட்டணம் எதுவும் இல்லை .'' என்றார்.
உலக சினிமா பாஸ்கரன் தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருபவர். இன்றைய திகதியில் தமிழ் திரைப்படங்கள் குறிப்பாக மாமனிதன் போன்ற திரைப்படங்கள் 50க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றதன் பின்னணியில் இவர்களுடைய வழிகாட்டுதலும், அயராத உழைப்பும் இருக்கிறது என்பதும், மேலும் இவர் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குபவராகவும் பணியாற்றி இருக்கிறார் என்பதும், இவருடைய ஒருங்கிணைப்பில் சென்னை உலக சினிமா விழா நடைபெறுவதால் இதற்கும் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.