சினிமாவை ஒரு மாய உலகம் என்று அழைப்பார்கள், அது உண்மைதான் என்பதை நிரூபிக்கின்றது பல நடிகர், நடிகைகளின் வாழ்க்கை என்று தான் கூற வேண்டும். புகழின் உச்சத்தில் இருந்து, கோடிகளில் புரண்ட நடிகர்கள் பலர் சாகும் தருவாயில் மண் வீட்டில் இறந்த கதைகள் பல உண்டு.
1970க்கு பிறகு நடிப்புலகில் கொடிகட்டி பறந்த பல நடிகர்கள், அவர்கள் நடித்த காலகட்டம் குறைவு என்ற பொழுதும், அந்த குறைவான காலகட்டத்தில் தங்களுக்கு கிடைத்த செல்வத்தை சேமித்தும், முதலீடு செய்தும் இன்று பெரும் பணக்காரர்களாக இருந்து வருகின்றனர். இதற்கு பாலிவுட் மற்றும் கோலிவுட் என்று அனைத்து திரையுலகிலும் பல நடிகர் நடிகைகள் சாட்சிகளாக திகழ்கின்றனர்.
அதே சமயம் புகழின் உச்சியில் இருந்தும், பல லட்சங்களை சம்பளமாக வாங்கியும், அதை சரியான முறையில் சேமிக்காமல், பாதுகாத்து வைக்காமல் இறந்து போன நடிகர், நடிகைகளும் இந்திய திரை உலகில் அதிகம் உண்டு. அந்த வகையில் 1940 முதல் 1950ம் ஆண்டு வரை பாலிவுட் உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த ஒருவர் தான், பிற்காலத்தில் சாப்பிட வழியின்றி மும்பை நகரில் நெரிசலான இடங்களில் இருக்கும் தொகுப்பு வீடுகளில் வாழ்ந்து இறந்துள்ளார்.
அந்த மாபெரும் நடிகரின் பெயர் தான் பகவான் டாடா, மும்பையில் பிறந்த இவர் ஒரு மில் தொழிலாளியின் மகனாவார். சிறு வயது முதலேயே மிகப்பெரிய நடிகராக ஆக வேண்டும் என்று ஆசையில் உழைத்து பாலிவுட் திரை உலகில் அறிமுகமானார். இவருடைய நடிப்பில் வெளியான அன்பிலா, மேஜிக் கார்பெட் மற்றும் பாகம் பாங் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களாக மாறியது.
வாரத்திற்கு ஏழு நாட்களுக்கு, ஏழு காரில் செல்லும் அளவிற்கு மிகப்பெரிய செல்வந்தராக மாறினார். மும்பையின் முக்கிய நகரில், கடற்கரையை பார்த்தவாறு சுமார் 25 அறைகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட சொகுசு பங்களாவில் தங்கி மிக நேர்த்தியாக நடித்து வந்தவர் அவர்.
ஆனால் அதன் பிறகு பட தயாரிப்பில் அவர் இறங்கியபொழுது அவருக்கு மாபெரும் நஷ்டம் எழ துவங்கியது. இருப்பினும் தொடர்ச்சியாக போராடி தன்னிடமிருந்த கார்கள் மற்றும் சொகுசு பங்களாவை விற்றும் தொடர்ச்சியாக படம் எடுக்க துவங்கினார். ஆனால் அதிலும் தோல்வி ஏற்பட்ட நிலையில், கவனித்துக் கொள்ள ஆட்கள் இன்றி மும்பையில் Chaal என்று அழைக்கப்படும் சிறிய தொகுப்பு வீடுகளில் தனது இறுதி காலத்தை கழித்துவிட்டு, கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் நாள் அவர் காலமானார்.
வெகு சில படங்களே நடித்தார் என்றுபொழுதும் குறுகிய காலத்தில் மிக மிகப் பெரிய நடிகராக போற்றப்பட்ட டாடா பாலிவுட் உலகின் முழு முடிசூடா மன்னனாக திகழ்ந்து வந்தார். ஆனால் தனது சம்பளத்தை முறையாக சேமிக்க முடியாமல் இறுதியில் தனது 89வது வயதில் காலமானார். பகவான் டாடா சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தான் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது