காவல் ஆய்வாளர் ஸ்வர்ணலதாகாவல் ஆய்வாளர் ஸ்வர்ணலதா
சினிமா தயாரிக்க பணம் தேவை என்பதால் பெண் இன்ஸ்பெக்டர் இதுபோல மிரட்டி பணம் பறித்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் நடிகையாக ஆசைப்பட்ட பெண் காவல் ஆய்வாளர், மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சினிமா நிறுவனம் வைத்திருக்கும் பெண் காவல் ஆய்வாளரின் பின்னணி என்ன?
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சீனு மற்றும் ஸ்ரீதர். இருவரும் இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். சீனு - ஸ்ரீதர் இருவரும் தங்களிடம் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை பத்து சதவீத கமிஷன் அடிப்படையில் மாற்றுவதற்காக இடைத்தரகர் சூரிபாபுவிடம் கொடுத்து அனுப்பினர்.
பணத்தை மாற்றிய சூரிபாபு 90 லட்சம் ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டு கட்டுகளை விசாகப்பட்டினம் பீச் வழியாக எடுத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுவர்ணலதா, ஊர்க்காவல் படையினருடன் சேர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சூரிபாபு வந்த காரை தடுத்து நிறுத்திய சுவர்ணலதா அவர் வைத்திருந்த பையை சோதனை செய்திருக்கிறார்.
சூரிபாபு வைத்திருந்த பையில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்ட சுவர்ணலதா அந்த பணம் பற்றி விசாரித்து இருக்கிறார். 90 லட்சம் ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் சூரிபாபுவை மிரட்டிய காவல் ஆய்வாளர், தனக்கு 20 லட்ச ரூபாய் பணம் கொடு, இல்லையென்றால் மொத்த பணத்தையும் பறிமுதல் செய்து விடுவேன் என்று எச்சரித்து இருக்கிறார்.
சுவர்ணலதாவுடன் பேரம் பேசிய சூரி பாபு கடைசியாக 12 லட்ச ரூபாயை அவருக்கு கொடுத்துவிட்டு மீதி பணத்தை எடுத்து சென்று பணத்தின் உரிமையாளர்களான சீனு, ஸ்ரீதர் ஆகியோரிடம் ஒப்படைத்து நடந்த சம்பவம் பற்றி விவரித்தார். அதிர்ச்சி அடைந்த ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகளான சீனு, ஸ்ரீதர் ஆகியோர் நேராக விசாகப்பட்டினம் காவல் ஆணையர் விக்கிரமாவை சந்தித்து நடந்த சம்பவம் பற்றி புகார் அளித்தனர்.
காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் சுவர்ணலதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், இடைத்தரகர் சூரி பாபு மற்றும் ஊர்க்காவல் படையினர் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். பெண் காவல் ஆய்வாளர் சுவர்ணலதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல சுவாரசிய தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தன.
தீவிர சினிமா பைத்தியமான சுவர்ணலதா சினிமாவில் நடிக்க விருப்பம் கொண்டு தற்போது டான்ஸ் பிராக்டீஸ் செய்து வருகிறார். ‘எபி 31’ என்ற சினிமாவில் தற்போது அவர் கதாநாயகியாக நடித்தும் வருகிறார்.
தான் நடிக்கும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராக சுவர்ணலதா இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சினிமா தயாரிக்க பணம் தேவை என்பதால் இதுபோல மிரட்டி பணம் பறித்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சுவர்ணதாவை காப்பாற்ற அக்கட்சி முக்கிய பிரமுகர்கள் எடுத்து அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.