"வதந்திகளை நம்ப வேண்டாம்" - நடிகர் சரத்பாபு உடல்நிலை குறித்த தகவல்!
04 May,2023
பிரபல தென்னிந்திய சினிமா நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார் என்ற தகவல் முற்றிலும் வதந்தி என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்து இருப்பதாக வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவரது சகோதரி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் சரத்பாபு பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவ சிகிச்சை மூலம் உடல் நலம் தேறியதால், அவர் பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
இதையடுத்து அவருக்கு மீண்டும் உடல் நிலையில் சருக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காததால் நடிகர் சரத்பாபு இன்று உயிரிழந்து விட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் நடிகர் சரத்பாபு உடல்நிலை குறித்து வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவரது சகோதரி கேட்டுக் கொண்டுள்ளார்.
1971 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் திரைப்படம் மூலம் நடிகர் சரத்பாபு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இவர் நடித்த அண்ணாமலை மற்றும் முத்து ஆகிய திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய புகழை தேடித் தந்தது.