பண்ணுகிறேன் என்பதை மட்டும் பாருங்கள் என 'பத்து தல' இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பேசினார். சிம்பு நடித்துள்ள 'பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், ஆரி, பிரியா பவானி சங்கர், ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் பிரதாப், இயக்குனர் சுதா கொங்கரா, சினேகன், தயாரிப்பாளர் ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 'நம்ம சத்தம்' பாடலை நடனமாடி கொண்டே ஏ.ஆர்.ரகுமான் நேரலையாக பாடினார். தொடர்ந்து பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றாக மேடையில் பாடப்பட்டன. 'நினைவிருக்கா' என்ற பாடலை ஏ.ஆர்.அமீன் பாட ஏ.ஆர்.ரகுமான் அதற்கு பியானோ வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், 'இப்படத்தில் நான் பணியாற்ற ஒப்புக் கொண்டதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் சிம்பு. இயக்குனர் கிருஷ்ணா இயக்கிய 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் 'முன்பே வா' என்ற பாடல் சோகப் பாடல் மாதிரி இருந்தது. கிருஷ்ணா தான் பாட்டு நல்லா இருக்கும் என்றார். இருபது வருடங்கள் கடந்தும் இப்போதுவரை அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் எனக்கு பிடித்த பாடல் ட்ரைலரில் ஒரு பாட்டு வரும் அது தான். 'நம்ம சத்தம்' பாட்டு சிம்பு பாட வேண்டியதுதான். சிம்பு ஊரில் இல்லாததால் அவர் பாடவில்லை. நான் பாடினேன். டி.ராஜேந்தர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் வேலை செய்யும் விதம் பிடிக்கும்' என்று தெரிவித்தார்.
பின்னர் சிம்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். லைட் மேன் தொழிலாளர்களுக்கு நிதி திரட்ட ஏ.ஆர்.ரகுமான் தொடங்கியுள்ள இணையதளத்தை நடிகர் சிம்பு தொடங்கி வைத்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய டி.ராஜேந்தர், 'இந்த மேடையில் அமர்ந்து உங்களை எல்லாம் சந்திப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பி வரவில்லை. அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பிறகு எந்த கூட்டமான பகுதிக்கும் செல்லவில்லை. நான் வர வேண்டும் என்று என் மகனுக்கு நாட்டம். வரவில்லை என்றால் அவருக்கு வாட்டம்.
என் மனைவி என்னை நீங்கள் பேசாமல் தான் வரவேண்டும் என்றார். நான் இங்கு நிற்பதற்கு காரணம் என் மகன். எனது நண்பர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கு வாழ்த்துகள். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள். எனது மகன் படத்துக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து பாடல் தரும் ஏ.ஆர்.ரகுமானுக்கும் நன்றி' என்று தெரிவித்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய, நான் இங்கே வரும்போது ஒரே விஷயம் தான் மனதில் ஓடியது. அது இந்த நிகழ்ச்சியில் அழக்கூடாது. அது மட்டும் தான் நினைத்தேன். படங்களில் சின்ன சென்டிமென்ட் காட்சி வந்தால்கூட அழுதுவிடுவேன். ஆனால் உங்களுக்காக தான் இன்று அழக்கூடாதுனு நினைத்தேன். ஏனென்றால் நாம் நிறைய கஷ்டங்களை பார்த்தோம். இனிமே சந்தோஷமாக இருக்க வேண்டும்.
சிறிய படம், பெரிய படம் எதுவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் அந்தப் படத்தில் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டும் பழக்கம் எனக்கு ண்டு. ஏனென்றால் இங்க தட்டி விடுவதுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தட்டி கொடுப்பதற்கு யாரும் இல்லை.
எல்லோரும் என்னிடம், 'முன்னாடி உங்கள் பேச்சில் ஒரு எனர்ஜி இருக்கும். இப்போது எல்லாம் சாஃப்டாக பேசுறீங்கனு கேட்கிறார்கள். அதுக்கு ஒரு காரணம் உள்ளது.
முன்பெல்லாம் 'நான் யாருனு தெரியுமாடானு' என்ற அளவுக்கு பேசியிருக்கேன். அப்போது நிறைய கஷ்டத்தில் இருந்தேன். இனி நான் சினிமாவில் இருக்கமாட்டேன், என் கதை முடிந்துவிட்டது என பலர் பேசினார்கள். அந்த நேரத்தில் நான் தான் எனக்கு துணையாக இருந்தேன். அதனால் தான் அதுபோன்ற கத்தி பேசுவது எல்லாம் நடந்தது. மாநாடு படத்தை கொண்டாடி, வெந்து தணிந்தது காடு படத்தில் என் நடிப்பை பாராட்டி, இதோ இப்போது இந்த மேடையில் கொண்டுவந்து என்னை நிறுத்தியுள்ளீர்கள். அப்புறம் எப்படி கத்தி பேச முடியும் பணிந்து தான் பேச முடியும்.
இனி பெரிதாக பேசுவதற்கெல்லாம் ஒன்றும் இல்லை; செயல் மட்டும்தான். இனிமே ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கலாம். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். இனிமே நான் என்ன பண்ணுகிறேன் என்பதை மட்டும் பாருங்கள். சாதாரணமாக வரவில்லை. வேறு மாதிரி வந்துள்ளேன். இனிமே உங்களை தலை குனிய விடமாட்டேன்' என்று பேசினார்