நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையை பூர்வீகமாக கொண்டவர் குஷ்பு. ரஜினிகாந்த், பிரபு இணைந்து நடித்த 'தர்மத்தின் தலைவன்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, ரசிகர்களின் மனதில் மணம் (குஷ்பு என்பதற்கு இந்தியில் மணம் என்பது பொருள்) வீச தொடங்கினார். அந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்திக் என அவர் ஜோடி சேராத நடிகர்களே இல்லை என்று கூறலாம்.
குஷ்புவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உண்டு. அவருடைய கலைத்திறமையை எந்த அளவுக்கு ரசிகர்கள் மெச்சினார்கள் என்பதற்கு, அவர் பெயரில் கட்டப்பட்டு இருக்கும் கோவிலே சாட்சி. குஷ்பு, இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரை உலகில் இருந்தவாறே தனது அரசியல் பிரவேசத்தையும் தொடங்கினார்.
சினிமா, அரசியல் என ஒரே நேரத்தில் இரட்டை குதிரைகளில் சவாரி செய்தார். குஷ்பு, தி.மு.க.வில் முதலாவதாக சேர்ந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். பின்னர் பா.ஜ.க.வில் சேர்ந்தார். அக்கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பை கொடுத்து அழகு பார்த்தது. மேலும் ஒரு மணிமகுடமாக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியையும் மத்திய அரசு அவருக்கு வழங்கியது. சமீபத்தில்தான் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், பிரபல இணையதளம் நடத்திய கருத்தரங்கில் குஷ்பு கலந்துகொண்டு பேசினார். அதில், மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் அதிக காலம் எடுத்துக்கொண்ட தனது வாழ்வில் நடந்த துயரமான ஒரு அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டார். இது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் குஷ்பு பேசியதாவது:- பாலியல் துன்புறுத்தல் சிறுவயதில் என்னுடைய தந்தையால் சந்தித்த துஷ்பிரயோகம்தான் மறக்கவும், மன்னிக்கவும் முடியாமல் என்னை பின்னுக்கு தள்ளியது. அதில் இருந்து முன்னேறி செல்வதற்கு எனக்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டது.
பெண் குழந்தையாக இருந்தாலும், ஆண் குழந்தையாக இருந்தாலும் ஒரு குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால், அது அவர்களின் வாழ்க்கையில் ஒரு வடுவாகவே மாறிவிடும். என்னுடைய அம்மாவுக்கும் ஒரு மோசமான திருமண வாழ்க்கையே அமைந்தது. மனைவி, குழந்தையை அடித்து, உதைப்பதும், மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் தனது பிறப்புரிமை என்று எனது தந்தை கருதினார். எனக்கு 8 வயது இருக்கும்போதில் இருந்தே பாலியல் துன்புறுத்தல்களை தொடங்கினார்.
நான் 15 வயது அடைந்தபோதுதான் அவருக்கு எதிராக பேசுவதற்கான துணிச்சல் வந்தது. உண்மையை சொன்னால் தாய், சகோதரர்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் துன்புறுத்தப்படுவார்களோ என்ற பயம் எனக்கு இருந்தது. அதனால் உண்மையை சொல்லாமல் தவித்து வந்தேன். அதேபோல கணவனை தெய்வமாக கருதி வந்த எனது தாய், நான் சொல்வதை நம்புவாரா? என்ற அச்சமும் எனக்குள் இருந்தது. நான் 15 வயதை எட்டியபோது பொறுத்தது போதும் என்ற மனநிலைக்கு வந்தேன். இதையடுத்து எங்களை விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார்.
அடுத்த வேளை சாப்பாடு எங்கிருந்து எங்களுக்கு கிடைக்கும்? என்று எதிர்பார்க்கும் நிலையில் இருந்தோம். என் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததால், தைரியம் வந்தது. அவர் இல்லை என்றால் நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க மாட்டேன். நான் வீட்டில் ஒரு மனிதனை எதிர்த்து போராட முடிந்ததால், என்னால் உலகத்தை மிகவும் எளிதாக நிர்வகிக்க முடிந்தது. இவ்வாறு குஷ்பு பேசினார்.