தயாரிப்பு: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
நடிகர்கள்: விஜய், ரஷ்மிகா மந்தானா, சரத்குமார், ஜெயசுதா, பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா கிரிஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர்.
இயக்கம்: வம்சி பைடிப்பள்ளி
மதிப்பீடு: 2 / 5
'தோழா' எனும் தமிழில் வெளியான திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி பைடிபள்ளி, 'வாரிசு' படத்தின் கதையை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் என ஐந்து நடிகர்களிடம் கதையை கூற, அவர்கள் நடிக்க மறுக்க, அதன் பிறகு அதே கதையை நடிகர் விஜய் தெரிவு செய்து கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். வம்சி -விஜய் கூட்டணி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
பெரும் தனவந்தரான சரத்குமார்- ஜெயசுதா தம்பதிகளுக்கு, ஸ்ரீகாந்த் ஷாம், விஜய் என மூன்று வாரிசுகள். விஜய்க்கும், சரத்குமாருக்கும் இடையே தொழில் மற்றும் வேலை விடயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் விஜய் வீட்டை விட்டு வெளியேறுகிறார். விஜய் உணவு, பயணம், பசி என்ற கோணத்தில் ஆய்வு செய்து உணவுக்கான பிரத்யேக அப் ஒன்றை வடிவமைத்து, அந்த தொழிலில் ஈடுபட திட்டமிடுகிறார்.
இந்நிலையில் சரத்குமாருக்கு கணைய புற்றுநோய் இருப்பதையும், அது அபாயகரமான கட்டத்தில் இருப்பதையும் அவருடைய குடும்ப நண்பரும், வைத்தியருமான பிரபு, சரத்குமாரிடம் தெரிவிக்கிறார். மரணம் குறித்த பயம் உள்ளுக்குள் ஏற்பட்டவுடன், தன் மனைவியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அறுபதாம் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார் சரத்குமார். ஏழு ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் தன்னுடைய அம்மாவின் வேண்டுகோளுக்காக, அறுபதாம் திருமணம் நடைபெறும் வரை வீட்டிற்கு வந்து உடனிருக்க ஒப்புக் கொள்கிறார்.
தாய்- தந்தையருக்கு திருமணம் நடைபெறும் தருணத்தில் சரத்குமாரின் மூத்த வாரிசான ஸ்ரீகாந்தின் கள்ளக்காதலி அங்கு வருகை தருகிறார். அதே தருணத்தில் தந்தைக்குத் தெரியாமல் தந்தையின் தொழில் முறை எதிரியான பிரகாஷ்ராஜின் வாரிசான கணேஷ் வெங்கட்ராம், இரண்டாம் வாரிசான ஷாமிடம் வாங்கிய கடனை வட்டியுடன் கேட்கிறார். தன் மூத்த மகன் மற்றும் இரண்டாவது மகனின் நடவடிக்கையை விரும்பாத சரத்குமார், தன்னுடைய தொழிலின் வாரிசாக விஜயை அறிவிக்கிறார். விஜய் அதை ஏற்றுக் கொண்டாரா..? விஜய் வாரிசாவதை அவர்களுடைய சகோதரர்களான ஸ்ரீகாந்தும், ஷாமும் ஏற்றுக் கொண்டார்களா..? தொழில்முறை போட்டியாளரான பிரகாஷ்ராஜ், சரத்குமாரை வென்றாரா..? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது 'வாரிசு' படத்தின் கதை.
முதல் பாதி அம்மாவின் அன்பு.. இரண்டாவது பாதி அப்பாவின் அன்பு.. என பிரித்து வைத்துக் கொண்டு பெற்றோர்கள் மீது பாசம் காட்டும் பிள்ளையாக அடக்கமாகவும், அர்த்தத்துடனும், ரசிக்கும் வகையிலும் நடித்திருக்கிறார் விஜய். 'சூரியவம்சம்', 'செக்கச் சிவந்த வானம்' என பல வெற்றி பெற்ற படங்களின் தாக்கங்கள் திரைக்கதையில் இருந்தாலும்.., விஜய் என்ற ஒற்றை காந்தத்திற்காக ரசிகர்கள் ஆரவாரமிட்டு ரசிக்கிறார்கள். அதிலும் இரண்டாம் பாதியில் இடம் பெறும் 'ரஞ்சிதமே..' என்ற பாடலுக்கு விஜயின் நடனம் செம மாஸ்.
குடும்பம், பாசம், காதல், எக்சன், நடனம் என பொழுதுபோக்கு அம்சத்திற்குரிய காரணிகள் அனைத்திலும் கில்லியாக தோன்றி ரசிகர்களை வியக்க வைக்கிறார் விஜய்.
சரத்குமாருக்கும் - விஜய்க்கும் இடையேயான கருத்து முரண் மேலோட்டமாக இருப்பதால், கதையின் மைய முடிச்சு ரசிகர்களின் மனதைக் காயப்படுத்தாமல் கடந்து போகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப காட்சிகள் திரையில் தோன்றுவதால், ஆங்காங்கே சோர்வும் தொய்வும் ஏற்படுகிறது. மாஸ் ஹீரோக்களுக்கு திரைக்கதை எழுதும் போது அழுத்தமும், வித்தியாசமும் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் இப்படத்தின் திரைக்கதை நிரூபித்திருக்கிறது.
சில காட்சிகளே வந்தாலும் எஸ். ஜே. சூர்யாவின் நடிப்பும், யோகி பாபு - விஜய் கூட்டணியின் நகைச்சுவை ஏரியாவும் ரசிகர்களுக்கு ஆறுதல்.
வி டி வி கணேஷ், ஸ்ரீமன் போன்றவர்களிடம் விஜய் சொல்லும் குட்டி கதை பக்கா கமர்சியல் ஐட்டம்.
பின்னணி இசையும், ஒளிப்பதிவும் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலையில் வைத்திருக்கின்றன.
விஜய் படத்தில் எக்சன் காட்சிகளில் அனல் தெறிக்கும். ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸிங்.
விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் ரஷ்விகா மந்தானா- பாடலுக்கும், கிளர்ச்சிக்கும், கிளுகிளுப்புக்கும் பயன்படுத்தப்படும் வழக்கமான நாயகி வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஃபீல் குட் திரைப்படம் என்றால், திரையில் பார்த்துவிட்டு பார்வையாளர்கள் ஃபீல் செய்ய வேண்டும். ஆனால் இங்கு படத்தின் இறுதி காட்சியில் நாயகன் ஃபீல் செய்கிறார். அதனை ரசிகர்களுக்கும் கடத்தியிருந்தால் 'வாரிசு' திரைப்படத்தை கொண்டாடி இருக்கலாம்.
அம்மா சென்டிமென்ட்... அப்பா சென்டிமென்ட்... நிம்மதியான மரணம்... வாழ்க்கை வாழ்வதற்கே.. குடும்பங்கள் என்றால் குறை இருக்கும்.. குடும்ப உறுப்பினர்களை விட்டுக் கொடுக்கக் கூடாது.. குடும்ப உறுப்பினர்கள் தவறு செய்தாலும் அவர்கள் மீது அதீத அன்பை செலுத்த வேண்டும்... என விஜய் மூலமாக சொல்லி இருப்பது.. சகிப்புத்தன்மை குறைந்து வரும் இந்த காலக்கட்டத்திய சமூகத்திற்கு தேவையானதாக இருந்தாலும், அதனை இன்னும் சுவாரசியமாக சொல்லி இருந்தால் 'வாரிசை' அனைவரும் கொண்டாடியிருப்பர்.