தயாரிப்பு: பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல்.எல்.பி & ஜீ ஸ்டுடியோஸ்
நடிகர்கள்: அஜித்குமார், மஞ்சு வாரியர், ஜோன் கொக்கன், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் மற்றும் பலர்.
இயக்கம்: ஹெச்.வினோத்
மதிப்பீடு: 3/5
இயக்குநர் ஹெச். வினோத் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம். இந்த படத்துக்காக அஜித்திடம் கதை சொல்லும்போது ஒரே ஒரு காட்சியை மட்டும் இயக்குநர் வினோத் விபரித்திருக்கிறார்.
அஜித் ரசித்த அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை என அவரே தெரிவித்திருக்கிறார். இருப்பினும், வினோத் சொன்ன மீதி கதை அஜித்தை கவர்ந்தது போல் ரசிகர்களையும் கவர்ந்ததா, இல்லையா என்பதை தொடர்ந்து காண்போம்.
அஜித் குமார், மஞ்சு வாரியர் தலைமையிலான கும்பல், சர்வதேச அளவில் நிழலுலக தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களிடம் சென்னையில் உள்ள தனியார் வங்கியின் முக்கிய அதிகாரியொருவர் சந்தித்து, விதிமுறைக்கு மீறி 500 கோடி ரூபா வங்கியின் பெட்டகத்துக்குள் இருக்கிறது. இதனை கொள்ளையடிக்க வேண்டும் என சொல்கிறார்.
இந்த சட்ட விரோத காரியத்தில் ஈடுபட ஒப்புக்கொள்ள முதலில் மறுப்பு தெரிவிக்கும் அஜித், பிறகு மனம் மாறி ஈடுபடுகிறார். ஏன், அதன் பின்னனி என்ன என்பதை பல சுவாரஸ்யமான எதிர்பாராத திருப்பங்களுடன் விபரிப்பது தான் 'துணிவு' படத்தின் திரைக்கதை.
வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவான இந்த கதையில் அஜித் குமார் வில்லனாக தோன்றுகிறார். வங்கிக் கொள்ளை சம்பவத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையில் தொடக்கம் முதலே விறுவிறுப்பும் பரபரப்பும் பற்றிக்கொள்கிறது.
தனியார் வங்கியில் நடக்கும் ஊழல், வாடிக்கையாளர்களின் முதலீடுகளில் நடைபெறும் மோசடிகள், பங்குச் சந்தை, தனியார் வங்கிகள் வழங்கும் கடன் போன்ற பொருளாதார குற்றங்களின் பின்னணி போன்றவற்றை துணிச்சலாக பேசியுள்ளார், இயக்குநர்.
இந்த திரைப்படம் வங்கியில் நடக்கும் கொள்ளை பற்றிய கதையல்ல என்பதையும், வங்கிகள் மக்களிடம் அடிக்கும் கொள்ளையை பற்றிய கதை என்பதையும், பாமர மக்களுக்கும் எளிதாக புரியும் வகையில் காட்சிகளுடன் விவரித்திருப்பதால், கடன் வாங்கி பொங்கலை கொண்டாடும் மக்கள், இந்த திரைப்படத்தை தாராளமாக ரசித்து கொண்டாடுவார்கள்.
அஜித் குமாரின் ஃப்ளாஷ் பேக் கட்சிகள் வலிமையாக இல்லை என்றாலும், கதைக்கு போதுமானதாக இருப்பதால் ரசிகர்கள் அஜித் குமாரை ரசிக்கிறார்கள்.
அஜித் குமார் வித்தியாசமாகவும், ஸ்டைலிஷாகவும் நடித்திருக்கிறார். அதிலும் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரில் அவரது கதாபாத்திரம் காட்டப்படும்போது, அவரின் நடனம் ரசிகர்களை உற்சாகமாக கரவொலி எழுப்ப வைக்கிறது.
அஜித் குமாருடன் நடித்திருக்கும் மஞ்சு வாரியர்- அனைத்து ஆயுதங்களையும் கையாளும் திறமையும் லாவகமும் பெற்றவர் என்பதால் திரையில் சிங்கப்பெண்ணாக வந்து கைதட்டலை அள்ளுகிறார்.
காவல்துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனியும், காவல்துறையில் பணியாற்றும் கடைநிலை காவலராக வரும் மகாநதி சங்கரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
ஊடகத்துறையின் மூத்த செய்தியாளராக நடித்திருக்கும் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் தோன்றும் இடமும், பேசும் வசனங்களும் படமாளிகையில் சிரிப்பலையை எழுப்புகிறது. இனி ஏராளமான திரைப்படங்களில் இவரை நகைச்சுவை நடிகராக காணலாம்.
மக்களிடமிருந்து கொள்ளையடிப்பதற்காக தனியார் வங்கிகள், தங்களது ஊழியர்களை எப்படி மூளைச்சலவை செய்ய வேண்டும் என விவரிக்கும் காட்சிகளில் நடித்திருக்கும் தர்ஷன், பொதுமக்கள் மற்றும் தனியார் வங்கி ஊழியர்களின் குறியீடாகவே இருக்கிறார்.
படத்தில் இடம்பெறும் அக்ஷன் காட்சிகள் ஏ க்ளாஸ். அதிலும் கடலில் நடைபெறும் உச்சகட்ட அக்ஷன் காட்சிகள், சேசிங் காட்சிகள் பார்வைக்கு விருந்து.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, பாடல்கள் அனைத்தும் மாஸாக இருக்கின்றன.
இயக்குநர் ஹெச். வினோத் 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை போல், தன் பாணியில் உருவாக்கியிருக்கும் படைப்பு 'துணிவு' என உறுதியாக சொல்லலாம்.
'நோ கட்ஸ் நோ க்ளோரி' என்ற வாசகத்துக்கு ஏற்ப துணிச்சல் இல்லையேல், தனியார் முதலாளிகளின் மறைமுக கொள்ளையை தடுக்க இயலாது என்பதனை இயக்குநர் உரத்து சொல்லியிருக்கிறார்.
துணிவு - அஜித்தின் அசத்தலான பொங்கல் பரிசு.