சுஷாந்த் சிங் மரணம் குறித்து பகீர் கிளப்பிய மருத்துவர்
26 Dec,2022
ரூபத்குமாரின் பேட்டிக்கு பிறகாவது சுஷாந்த்தின் வழக்கு சரியாக விசாரிக்கப்பட்டு அவரது மரணம் கொலையாக இருந்தால் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் திடீர் திருப்பமாக அவருக்கு உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா என்ற மருத்துவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று அளித்திருக்கும் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தனியார் சேனலுக்கு ரூப்குமார் அளித்த பேட்டியில், அன்று கூப்பர் மருத்துவமனைக்கு 5 இறந்த உடல்கள் வந்தன. அதில் ஒன்று விஐபியின் உடல். அதனை உடற்கூராய்வு செய்கையில் அது விஐபியின் உடல் என எங்களுக்கு தெரியவந்தது.
அவரது உடலில் நிறைய மார்க்குகள் இருந்தன. குறிப்பாக அவரது கழுத்தில் 2 முதல் 3 மார்க்குகள் இருந்தன. இதனைப் பார்த்தபோது என் உயர் அதிகாரியை உடனடியாக அழைத்து இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினேன். அதற்கு அவர் முடிந்தவரை சில புகைப்படங்கள் எடுத்து பின் அவரது உடலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படி அவர் எனக்கு அறிவுறுத்தினார் என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். விதிகளின்படி உடற்கூராய்வை முறையாக வீடியோ பதிவு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரத்தில் ஆதித்ய தாக்கரேவுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் அதே குற்றச்சாட்டை ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவை சேர்ந்த ராகுல் ஷெவாலே நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். ஆதித்ய உத்தவ் தாக்கரேவிடமிருந்து ரியாவுக்கு 44 முறைகள் போன் சென்றுள்ளதாக பீகார் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக ராகுல் ஷெவாலே குறிப்பிட்டிருக்கிறார்.
பாலிவுட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'கை போ சே' என்ற திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமான சுஷாந்த் சிங், 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட சில திரைப்படங்கள் மூலம் சிறந்த நடிகராக ரசிகர்கள் மனதில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அமீர்கான் நடிப்பில், பெரிய அளவில் ஹிட்டாகி இருந்த பிகே திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் நடித்திருந்தார். இதனையடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் அவரை பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. இதன் பின்னர் சுஷாந்த் சிங் நடிப்பில், சிச்சோரே திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிச்சோரே படமும் தற்கொலைக்கு எதிரான கருத்துக்களை பேசியது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவுக்கு முன் கடைசியாக வெளியான படமாக டிரைவ் என்ற படம் அமைந்தது. இப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. அவரது மறைந்து ஒரு மாதத்துக்கு பிறகு தில் பேச்சாரா என்ற படம் வெளியாகியிருந்தது. நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் ஆங்கிலப்படமான தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் படத்தின் பாலிவுட் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மன நல மருத்துவரிடமும் சுஷாந்த் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். சுஷாந்த் சிங்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்துவந்தனர். சுஷாந்த்தின் மரணத்தில் ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
அதற்கேற்ப சுஷாந்த் சிங்கின் தந்தை கேகே சிங், நடிகை ரியா சக்ரபோர்த்தி தனது மகனை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவருக்கு போதை மருந்து கொடுத்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்துவந்தது. நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோக் கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையில் இருந்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
சுஷாந்த் மறைந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னும் அவரது மரணம் மர்மமாகவே நீடிக்கிறது. ரூபத்குமாரின் பேட்டிக்கு பிறகாவது அவரது வழக்கு சரியாக விசாரிக்கப்பட்டு அவரது மரணம் கொலையாக இருந்தால் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.