கிறிஸ்டோபர் நோலனின் 'ஓபன்ஹேய்மர்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு
21 Dec,2022
முன்னணி ஹொலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஓபன்ஹேய்மர்' எனும் ஆங்கில மொழி திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
'பேட்மேன்' வரிசையில் வெளியான திரைப்படங்களை இயக்கி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஓபன்ஹேய்மர்'.
சர்வதேச அளவில் பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி ஜே றோபட் ஓபன்ஹேய்மரின் சுயசரிதையை தழுவி இந்தப் படம் தயாராகி இருக்கிறது. குறிப்பாக 1940 ஆம் ஆண்டு கால கட்டத்தில் உலகின் முதன் முதலாக நடைபெற்ற அணு ஆயுத பரிசோதனையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனாக ஹொலிவுட் நடிகர் கில்லியன் மர்பி நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் அணு ஆயுத பரிசோதனை நடத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள், ஒருங்கிணைவுகள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்று, பார்வையாளர்களை எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பல மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. 100 மில்லியன் அமெரிக்கன் டொலர் முதலீட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
யாராலும் எளிதில் ஊகிக்க முடியாத கதை, திரைக்கதையை அமைத்து, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் மாயாஜால வித்தையை எளிதாக கையாளும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் தயாராகியிருப்பதால் 'ஓபன்ஹேய்மர்' திரைப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.