கடனை கட்டாததால் ஏலம் போன மதுவந்தியின் வீடு.. ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயம் என பரபரப்பு புகார்
17 Dec,2022
ஏலம் விடப்பட்ட தமது வீட்டில் இருந்த ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்டு தரப்படி பாஜக செயற்குழு உறுப்பினரும் நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் மகளுமான மதுவந்தி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மேலும் படிக்கவும் .
பாஜகவின் செயற்குழு உறுப்பினரான மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அப்பார்ட்மெண்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு சொந்த வீடு ஒன்றை வாங்கினார். இந்த வீட்டை வாங்குவதற்காக ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடியே 20 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
இந்த கடன் தவணையை கட்டாத மதுவந்திக்கு கடனை கட்ட சொல்லி பலமுறை பைனான்ஸ் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அதனை கொஞ்சம் பொருட்படுத்தாத மதுவந்தி பணம் கட்டாமல் காலம் தாழ்த்தியும் பைனான்ஸ் அதிகாரிகளுக்கு சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஃபைனான்ஸ் நிறுவனம் மெட்ரோபாலிட்டன்- அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி அட்வகேட் கமிஷனர் வினோத் குமார் முன்னிலையில் மதுவந்தியின் வீட்டை போலீசார் பாதுகாப்போடு சீல் வைத்து வீட்டுச் சாவியை ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வீடு சீல் வைக்கப்பட்ட சில தினங்களிலேயே வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுமாறு ஃபைனான்ஸ் தரப்பில் இருந்து மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஆனால் பொருட்களை எடுக்காமல் மதுவந்தி காலம் தாழ்த்தி வந்ததுள்ளார். இந்த நிலையில் பைனான்ஸ் நிறுவனம் வீட்டை மற்றொரு நபருக்கு ஏலம் விட்டுள்ளனர். இந்த நிலையில் வீட்டை ஏலம் விட்டது தனக்கு தெரியாது எனவும் மேலும் வீட்டிலிருந்த பொருட்கள் மாயமாகியுள்ளது. பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் எனவும் அந்த பொருட்களை மீட்டு தரும்படியும் தனக்குத் தெரியாமல் தனது வீட்டில் இருந்த பொருட்களையும் சேர்த்து ஏலம் விட்டதாக ஃபைனான்ஸ் கம்பெனியின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குறிப்பாக ஃபைனான்ஸ் நிறுவன மண்டல மேலாளர் உமாசங்கர் மற்றும் கார்த்திகேயன் உட்பட 10 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.