நடிகர்கள்: வடிவேலு, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ராவ் ரமேஷ், ஆனந்த் ராஜ், மனோபாலா, முனீஸ்காந்த், லொல்லு சபா மாறன், லொல்லு சபா சேஷு; இசை: சந்தோஷ் நாராயணன்; இயக்கம்: சுராஜ்.
ஐந்தாண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த வடிவேலு, இந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு மீண்டும் வந்திருக்கிறார்.
தலைநகரம் படத்தில் வடிவேலு ஏற்று நடித்த ஒரு பாத்திரத்தின் பெயரை, படத்திற்குச் சூட்டியதன் மூலம், நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார் இயக்குநர் சுராஜ். ஆனால், இந்த எதிர்பார்ப்பை படம் ஈடு செய்ததா?
இந்தப் படத்தின் கதை இதுதான்: பணக்கார வீட்டின் நாய்களை கடத்தி, அதன் உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் கடத்தல் மன்னன் நாய் சேகர் (வடிவேலு). ஒரு முறை தெரியாமல், பயங்கர தாதா ஒருவரின் நாயைக் கடத்தி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
விளம்பரம்
இந்த நிலையில், நாய் சேகரின் குடும்பத்திற்குச் சொந்தமான நாயையே ஒருவர் கடத்தி வைத்து, அதன் ராசியால் பணம் சம்பாதிப்பதைத் தெரிந்துகொண்டு, அதை மீட்க புறப்படுகிறார். இறுதியில் தனது நாயை நாய் சேகர் மீட்டாரா? இதில் என்ன பிரச்னைகள் ஏற்பட்டன என்பது மீதிக் கதை.
இந்தப் படத்திற்கு இப்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. பல ஊடகங்கள் இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்களையே முன்வைத்துள்ளன.
வடிவேலு தன்னால் முடிந்த நடிப்பையும், உழைப்பையும் செலுத்தியிருந்தாலும் மொத்தப் படமும் முழுமையற்று ஒரு சில காமெடி காட்சிகளை மட்டும் பார்த்த உணர்வைத் தருகிறது.
கதையாகவோ, திரைக்கதையாகவோ எந்த இடத்திலும் அழுத்தம் இல்லாமல் நகர்கிறது என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
வடிவேலுவுக்கு வெற்றி கொடுக்கும் முயற்சியில் இயக்குநர் ஓரளவு வென்றிருக்கிறார்.
மொத்தத்தில் எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ நகைச்சுவைகளை ரசிக்கலாம் என்கிறது தினமணி நாளிதழின் இணையதளம்.
படத்தின் நீளமும் சில காமெடி காட்சிகளும் மக்களை ஏமாற்றினாலும் பல இடங்களில் காமெடி பயங்கரமாக வொர்க் அவுட் ஆகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு கலகலப்பான படமாக அமைந்திருக்கிறது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளம்.
“சுராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தின் முதல் பாதி திரைக்கதையில் நகைச்சுவை வறட்சி தலைவிரித்தாடுகிறது. காமெடியை எதிர்நோக்கி காத்திருக்கும் பார்வையாளர்களுக்கு ஆனந்த்ராஜ் திரையில் தோன்றுவது சற்று ஆறுதல்.
மற்றபடி, வடிவேலு நாய் கடத்துபவர் என காட்ட நினைத்து வைக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் உப்பு சப்பில்லாதவை. ஆனந்த்ராஜ் – வடிவேலு நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் சுவாரஸ்யம்.
நிறைய காமெடி நடிகர்கள் இருந்தும் அவர்களால் திரைக்கதைக்கு தேவையான நகைச்சுவை கொடுக்க முடியாததாலும், அழுத்தமில்லாத காட்சிகளாலும் வடிவேலுவால் கூட முதல் பாதியைக் காப்பாற்ற முடியவில்லை.
இரண்டாம் பாதியில் கண்தெரியாத மாற்றுத்திறனாளியாக ஸ்கோர் செய்கிறார் வடிவேலு. இடையில் வரும் பாஸ்வேர்டு காமெடியும், க்ளைமாக்ஸும் சிரிப்பலையை எழுப்புகின்றன. இதைத்தாண்டி படத்தில் பெரிய அளவில் சிரிக்கவோ, ரசிக்கவோ, அழுத்தமான திரைக்கதைக்கோ எந்த இடத்திலும் இடமளிக்காதது கைபேசியை கையிலெடுக்க தூண்டுகிறது.” என விமர்சித்துள்ளது இந்து தமிழ் திசை இணையதளம்.
பழைய வடிவேலு எங்கே?
“முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் கிளைமேக்ஸில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.
ஆட்களைக் கடத்தியே பழக்கப்பட்ட தமிழ் சினிமாவில் முதல்முறையாக நாய்களை கடத்தினால் எப்படி இருக்கும் என்கிற புதிய கருவுடன் இயக்குநர் சுராஜ் வந்திருந்தாலும் மேக்கிங் மற்றும் திரைக்கதையில் சொதப்பியுள்ளார்.
நகைச்சுவை மற்றும் உடல் மொழிகளில் புதிதாக எந்த மாற்றமும் இல்லாத நிலையில், புதுப்புது பாணி காட்டும் ’பழைய’ வடிவேலுவை இனிக் காணவே முடியாதோ என்றே எண்ண வைக்கிறது” என்கிறது தினமணி நாளிதழ்.
ஆனால், இந்தப் படம் குறித்து முழுக்க முழுக்க பாசிட்டிவான விமர்சனத்தை அளித்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ். “நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கிறார் வைகை புயல். வழக்கமான தன் நக்கல், நையாண்டியான காமெடி கவுன்டர்களாலும், அசத்தலான உடல் மொழியாலும் படம் முழுக்க திகட்ட திகட்ட சிரிப்பை வாரி வழங்கியிருக்கிறார்.
அவர் சாதாரணமாக பேசும் வசனங்களும், சாதாரணமாக நடக்கும் நடையும் கூட ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுக்கிறது என்பதை பார்க்கும்போது உண்மையாகவே வைகைப்புயல் “கம்-பேக்” கொடுத்து விட்டார் என்றே தோன்றுகிறது.
சில ஆண்டுகள் இடைவெளி விட்டு வந்திருந்தாலும், இப்படத்தில் அவருடைய நடிப்பும் காமெடி காட்சிகளும், வசனங்களும் அவர் ஒரு மகா காமெடி கலைஞன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன.
சின்ன, சின்ன சண்டை காட்சிகளில்கூட சிரிப்பை தர இவரால் மட்டுமே முடியும். காமெடி நாயகனாக மட்டுமல்லாமல் இப்படத்தின் நான்கு பாடல்களையும் பாடி சிறந்த பாடகராகவும் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார் வடிவேலு” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பைப் பொறுத்தவரை, பொதுவாக அனைத்து ஊடகங்களும் நேர்மறையான விமர்சனங்களையே முன்வைத்துள்ளன.
“நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் மீண்டும் வடிவேலு. பார்வையாளர்கள் பார்த்துப் பார்த்து ரசித்து குலுங்கி சிரித்த தனது தனித்துவ உடல் மொழியை வார்த்திருக்கிறார்.
அவருக்கான அறிமுக காட்சிகள் கூஸ்பம்ஸ்! கிட்டத்தட்ட ஒரு மாஸ் ஹீரோவுக்கு இணையான அந்த இன்ட்ரோ காட்சி ரசிக்க வைக்கிறது.
தனக்கான பாடி லாங்குவேஜில் ஸ்டைலாக நடந்து வருவது, வசனமற்ற காட்சிகளிலும் தனது முகபாவனையால் சிரிக்க வைப்பது, இங்கிலீஷ் பேசும் அந்த ஸ்டைல், டம்மியான தன்னை மாஸாக காட்ட நினைத்து பல்பு வாங்குவது என ஈர்க்கிறார். ஆனாலும், இயல்பான அந்த வின்டேஜ் வடிவேலு ஏனோ மிஸ்ஸிங்!
ரிட்டையர்டு ரவுடியை வைத்து, டம்மி கூட்டாளிகளுடன் அவர் நடத்தும் ‘கடத்தல்’ தர்பார் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ராவ் ரமேஷின் நடிப்பு கவனம் பெறுகிறது.
ரெடின் கிங்க்ஸ்லீ வழக்கமான தனது பாணியில் சில இடங்களில் புன்முறுவலையும், ஒரு சில காட்சிகளில் சத்தமாக சிரிக்கவும் வைக்கிறார். செட் ப்ராபர்டியாக வருகிறார் ஷிவாங்கி.
பிரசாந்தை முதல் பாதியுடன் முடித்து அனுப்பும் இயக்குநர் அந்த இடத்தில் இரண்டாம் பாதிக்கு ஷிவானியை தேர்ந்தெடுத்துள்ளார்.
தவிர முனிஷ்காந்த், லொள்ளு சபா ஷேஷூ, கேபிஒய் ராமர், கேபி ஓய் பாலா, லொள்ளு சபா மாறன், மனோபாலா தேவையான நடிப்பை பதிவு செய்கின்றனர்.” என்கிறது இந்து தமிழ் திசை. “வடிவேலுவின் குழுவினராக நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி, யூ டியூபர் பிரஷாந்த் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, இருவரும் மற்றொரு ரவுடியான ஆன்ந்த் ராஜிடம் அடி வாங்கும் காட்சிகளில் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிப்பு வருகிறது. வில்லனாக மிரட்டிவந்த ஆனந்த் ராஜ் சமீப காலமாக காமெடியில் கலக்கி வருகிறார்.
இந்தப் படத்திலும் அவர் வரும் காட்சிகளில் இயல்பாக சிரிப்புச் சத்தம் கேட்கிறது. அவர் குழுவில் இடம்பெற்ற லொல்லு சபா சேஷூ, ’என்னம்மா’ ராமர் தங்களுக்கு கிடைத்த சில நிமிடங்களை மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளனர்” என்கிறது. தினமணி நாளிதழ்.
இந்தப் படத்தில் வடிவேலுவின் நடிப்பை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம். “நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கிறார் வைகை புயல். வழக்கமான தன் நக்கல், நையாண்டியான காமெடி கவுன்டர்களாலும், அசத்தலான உடல் மொழியாலும் படம் முழுக்க திகட்ட திகட்ட சிரிப்பை வாரி வழங்கியிருக்கிறார்.
அவர் சாதாரணமாக பேசும் வசனங்களும், சாதாரணமாக நடக்கும் நடையும் கூட ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுக்கிறது என்பதை பார்க்கும்போது உண்மையாகவே வைகைப்புயல் கம்-பேக் கொடுத்து விட்டார் என்றே தோன்றுகிறது.
சில ஆண்டுகள் இடைவெளி விட்டு வந்திருந்தாலும், இப்படத்தின் அவருடைய நடிப்பும்,காமெடி காட்சிகளும், வசனங்களும்,தான் ஒரு மகா காமெடி கலைஞன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
சின்ன சின்ன சண்டை காட்சிகளில் கூட சிரிப்பை தர இவரால் மட்டுமே முடியும். காமெடி நாயகனாக மட்டுமல்லாமல் இப்படத்தின் நான்கு பாடல்களையும் பாடி சிறந்த பாடகராகவும் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார் வடிவேலு” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.
உண்மையாகவே இது வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் ஒரு காமெடி ரிட்டன் தான் என்கிறது அந்த இதழ்.
ஆனால், இந்து தமிழ் திசையைப் பொறுத்தவரை “வடிவேலுவின் ‘நாய் சேகர்’ பார்வையாளர்கள் மனதில் நீங்கா இடத்தில் நிலைகொள்ளும் என கருதினால், அது சில காமெடிக் காட்சிகளைத் தாண்டி பெரிய அளவில் ஆட்கொள்ளாமல் கடந்திருக்கிறது” என்பதுதான் முடிவான கருத்தாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக ஊடகங்களில் வந்த விமர்சனங்கள், ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவிக்கும் விமர்சனங்களைப் பார்க்கும்போது, வடிவேலுவின் காமெடி பல இடங்களில் சிறப்பாக வந்திருந்தாலும், ஒரு படமாக “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” முழுமை பெறவில்லை என்றே தோன்றுகிறது.