புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'Hi 5' படத்தின் இசை வெளியீடு
08 Dec,2022
குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களின் வலியையும், வாழ்வியலையும் மையப்படுத்தி புதுமுகங்களின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'Hi 5' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் பாஸ்கி டி. ராஜ் இயக்கி இருக்கும் முதல் திரைப்படம் 'Hi 5'. முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சிவக்குமார் ரமேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.எஸ். ரவி பிரியன் இசையமைத்திருக்கிறார்.
ஆண் மற்றும் பெண் ஆகியோர்களின் முதுமை கால வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாஸ்கி பிலிம்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பாஸ்கரன் துரைராஜா தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' முதியவர்கள் என்பவர்கள், இரண்டாவது குழந்தை பருவத்தில் இருப்பவர்கள். ஆனால் இவர்களை வீட்டில் இருப்பவர்கள் துல்லியமாக புரிந்து கொள்வதில்லை.
முதியவர்களை புரிந்து கொள்ளுங்கள் என வலியுறுத்துவது தான் இந்த படைப்பு. இதனை சிறார்கள் பார்வையில் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன்'' என்றார்.
இதனிடையே தயாரிப்பாளரும், இயக்குநருமான பாஸ்கரன் துரைராஜா கனடாவிற்கு புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் என்பதும், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கனடாவில் நடைபெற்றது என்பதும், இதன் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது என்பதும், இவ்விழாவில் நலிந்த தமிழ் திரைப்பட விநியோகஸ்தரான நந்தகோபால் என்பவரது பிள்ளைகளின் கல்விச் செலவிற்கு, தயாரிப்பாளர் நன்கொடை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.