கிருஷ்ணன் சாரிடம் சொன்ன எம்.ஜி.ஆர் ரத்தினகுமார் படத்தில் தனது போஷனை சீக்கிரம் முடித்தவிட்டால் நான் மருதநாட்டு இளவரசி படத்திற்காக மைசூருக்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.
சைக்கிளுக்காக கெஞ்சிய எம்.ஜி.ஆர்ஸ வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ஃப்ளாஷ்பேக்!
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி உருவாக்கி வைத்துள்ள எம்.ஜி.ஆர் முதல் பட வாய்ப்பு மற்றும் கதாநாயகான மாறிய தருணம் குறித்து நடிகரும் இயக்குனருமான மனோபாலா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். 1917-ம் ஆண்டு இலங்கையில் பிறந்த இவர், 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் கேரக்டர் நடிகராக நடித்து பிறகு நாயகனாக உயர்ந்த எம்.ஜிஆர்.தமிழ் சினிமாவின் தவிர்க் முடியாத நாயகனாக வளர்ந்தார்.
நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் தயாரிப்பு என பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆரின் புகழ் காலத்தால் அழியாதது என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. இன்றைய அரசியல்வாதிகள் திரைத்துறையினர் கூட தங்களது மேடை பேச்சுகளில் எம்.ஜி.ஆர். பற்றி பேசாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம்.
இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான எம்.ஜி.ஆருக்கு முதல் பாட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்தும் அவரது அவரது முதல் கதாநாயகன் வாய்ப்பு குறித்து தான் படித்து தெரிந்துகொண்டதை நடிகரும் இயக்குனருமான மனோபாலா வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
ஆங்கில ஆட்சி காலத்தில் புகழ்பெற்ற இயக்குனர்களாக இருந்தவர்கள் கிருஷ்ணன் பஞ்சு. இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். இதில் கிருஷ்ணன் எம்.ஜி.ஆர்.இடையேயான ஒரு நட்பு முதலில் சண்டையில் தொடங்கியுள்ளது. கிருஷ்ணன் பஞ்சு இணைவதற்கு முன்பு கிருஷ்ணன் வேல் பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் பிரபலமான கம்பெனியின் புதிய சைக்கிள் வைத்திருந்த கிருஷ்ணன் தான் வேலைக்கு செல்லும்போது நிறுவனத்தின் வெளியில் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வெளியில் வந்துபார்த்த போது சைக்கிள் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் அக்கம் பக்கம் விசாரித்துள்ளார். அப்போது ஒருவர் பக்கத்தில் ஒரு ஷூட்டிங் நடக்குது அங்கிருந்து ஒருவர் வந்து சைக்கிளை எடுத்து சென்றதாக சொல்கிறார்.
இதனால் கோபப்பட்ட கிருஷ்ணன் நேராக படப்பிடிப்பு தளத்தில் சென்று சைக்கிளை வைத்திருந்தவரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது அந்த சைக்கிளை வைத்திருந்தவர்கள் தான் எம்.ஜி.ஆர். அந்த படம் சதலீலாவதி. ஆனால் அந்த படத்தின் இயக்குனர் எல்லிஸ் டங்கன், அவரை வெளியில் நிற்க சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு எம்.ஜி.ஆர். ஓடி வந்து நான் செய்தது தப்புதான். உங்களிடம் சொல்லாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன் இந்த படத்தில் எனக்கு 2 சீன் தான் இதில் நடித்தால் எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். படப்பிடிப்பு முடிந்தவுடன் சைக்கிளை நானே வந்து கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு கிருஷ்ணன் சரி என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். இப்படி மோதலில் தொடங்கிய இந்த சந்திப்பு நாளைடைவில் பெரிய நட்புக்கு வழி செய்துள்ளது.
அதன்பிறகு 1949-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய ரத்தினகுமார் என்ற படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்டதால் எம்.ஜி.ஆருக்காக புதிய கேரக்டர் ஒன்றை உருவாக்கி அதில் நடிக்க வைத்துள்ளார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு மருதநாட்டு இளவரசி படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதை கிருஷ்ணன் சாரிடம் சொன்ன எம்.ஜி.ஆர் ரத்தினகுமார் படத்தில் தனது போஷனை சீக்கிரம் முடித்தவிட்டால் நான் மருதநாட்டு இளவரசி படத்திற்காக மைசூருக்கு செல்வேன் என்று சொல்ல அந்த ரத்தினகுமார் படத்தின் நாயகன் பி.யூ சின்னப்பாவுக்கு தெரியாமல் எம்.ஜி.ஆரின் போஷன தனியாக எடுத்து படத்துடன் சேர்த்துள்ளனர். அப்போது தன்னை ஒரு க்ளோசப் காண்பிக்க மாட்டார்களா என்று முன்னணி நடிகர்கள் பலரும் ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு க்ளோசப் வைத்து அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியவர் கிருஷ்ணன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து ஏவிஎம் புரொடக்ஷன்சில் சிவாஜி படங்களை இயக்கி வந்த கிருஷ்ணன் பஞ்சு நமக்கு படம் இயக்கிவில்லையே என்று எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டதை தொடர்ந்து பெற்றால்தான் பிள்ளையா இதய வீனை உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். பின்னாளில் எம்.ஜி.ஆர் பெரிய நாயகனாக ஆன பிறகு அவர் செட்டுக்கு வந்தாலே அனைவரும எழுந்து நிற்பார்கள். அந்த வரிசையில் கிருஷ்ணன் பஞ்சுவும் ஒருமுறை எழுந்து நின்றுள்ளார்.
இதனை பார்த்த எம்.ஜி.ஆர் என்னை வளர்த்தவிட்ட நீங்களே இப்படி செய்யலாமா என்று கேட்டபோது எனக்கு நானே மரியாதை செய்கிறேன் என்று கிருஷ்ணன் கூறியுள்ளார் என்று மனோபாலா தெரிவித்துள்ளார்.