அஞ்சான் பார்ட் 2-வா 'தி வாரியர்'? திரைவிமர்சனம்!
15 Jul,2022
தமிழ் திரையுலகில் மாஸ் படங்களுக்கு என்று பெயர் போன இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் வெளிவந்த ரன், சண்டக்கோழி, பையா போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. 2014 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து இவர் இயக்கிய அஞ்சான் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. மேலும் இப்படம் பல விமர்சனங்களுக்கும் உள்ளானது. அதன் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சண்டக்கோழி இரண்டாம் பாகம் திரைப்படமும் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இதனால் 4 வருடங்கள் அமைதியாக இருந்த லிங்குசாமி தற்போது தெலுங்கிற்கு சென்று ஒரு படத்தினை இயக்கி உள்ளார்.
தெலுங்கு திரை உலகில் தற்போது டாப்பில் இருக்கும் ராம் பொதினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டியை வைத்து தி வாரியர் என்ற படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். எம்பிபிஎஸ் படித்துவிட்டு அரசு மருத்துவராக சென்னையில் இருந்து மதுரைக்கு தனது அம்மாவுடன் இடம்பெயர்கிறார் ஹீரோ ராம். அங்கு மிகப் பெரிய ரவுடியாக இருக்கும் ஆதியுடன் இவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது. வில்லன் ஆதி ஹீரோவை அடித்து துவம்சம் செய்கிறார். பிறகு வில்லனை பழிவாங்க ஹீரோ என்ன செய்தார் என்பதே வாரியர் படத்தின் கதை. வாரியர் திரைப்படத்தினை முழுவதும் ஒரு தெலுங்கு படமாக லிங்குசாமி எடுத்து இருந்தால் கூட ஓரளவிற்கு நன்றாக வந்திருக்குமோ என்னமோ. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்பதற்காக படத்தில் பல மாற்றங்களை செய்துள்ளனர். இதுவே படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. குறிப்பாக படத்தில் காட்டப்படும் இடங்கள் அப்பட்டமாக செட் என தெரிகிறது. இது கதையினும் நாம் செல்ல முடியாத அளவிற்கு தடையாக உள்ளது.
மேலும் மதுரை என்று ஆந்திராவை காட்டுவதும், நம்பர் பிளேட்டில் மட்டும் தமிழ்நாடு என்று இருப்பதும் எந்த ரகத்திலும் சேர்க்க முடியவில்லை. பல தெலுங்கு படங்களில் நாம் பார்த்த அதே இடங்கள் மற்றும் அதே காட்சிகள் தான் வாரியர் படத்திலும் உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படத்தை எடுப்பதால் லிங்குசாமி இரண்டு மொழி படங்களில் இருந்தும் காட்சிகளை எடுத்து வாரியர் படமாக உருவாக்கியுள்ளார். சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா மற்றும் லிங்குசாமி இதற்கு முன்பு இயக்கிய சண்டக்கோழி மற்றும் சில படங்களின் ரீமேக் போலவே வாரியர் உள்ளது. இரண்டு விதமான கெட்டப்புகளில் வரும் ஹீரோ ராம் பொதினேனி நன்றாகவே நடித்துள்ளார். மாஸ் காட்சிகளில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் சண்டை காட்சிகளை மேலும் வலுப்படுத்துகிறது. வாரியர் படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு அதிக பில்டப் காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வில்லன் ஹீரோவை பழிவாங்க அம்மாவை மிரட்டுவதும், ஹீரோயினை கடத்துவதுமாக 80களின் வில்லன் போலவே செய்கிறார். கதாநாயகியாக வரும் கீர்த்தி ஷெட்டி மிகவும் அழகாககியூட்டாக திரையில் காட்சியளிக்கிறார். கதையை தாண்டிகீர்த்தி ஷெட்டியை பார்ப்பதற்காகவே திரையரங்கிற்குள் ரசிகர்கள் படை எடுக்கலாம்.
மாஸ் காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தவறியதில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. பல சூப்பரான சண்டை காட்சிகளுக்கு இவரது சுமாரான பிஜிஎம் அந்த காட்சிகளை சாதாரணமாக ஆக்கி விடுகிறது. புல்லட் சாங் மற்றும் விசில் சாங் ஆகிய இரண்டு பாடல்களையும் தவிர மற்ற எதுவுமே மனதில் நிற்கவில்லை. ஹீரோயின் அம்மாவாக வரும் நதியா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்துவிட்டு நகர்கிறார். இதற்கு முன்பு சில படங்களில் ஆதி வில்லனாக நடித்திருந்தாலும் இந்த படத்தில் ஒரு மாஸ், டெரர் வில்லனாக காட்டப்படுகிறார். இருப்பினும் அது ரசிகர்களுக்கு சிரிப்பை மட்டுமே வரவைக்கிறதே தவிர பயத்தை வர வைக்கவில்லை. சுமாரான திரைக்கதை, பலம் இல்லதாக ஹீரோ வில்லன், படத்தின் நீளம், லவ் போர்சன்ஸ் என வாரியர் படம் டிபிகல் தெலுங்கு படமாக உள்ளது. தெலுங்கு படங்களை அதிகமாக விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த வாரியர் ஏமாற்றத்தை அளிக்காமல் இருக்கலாம்.