பாலிவுட்டை ஆளப்போகும் இயக்குனர் அட்லீ..!
12 Jul,2022
மிக இளம் வயதில் தமிழ்சினிமாவின் இயக்குனராகி தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்த இயக்குனர் அட்லீயின் திரைப்பயணம் குறித்த சிறப்பு தொகுப்பு.
பிரமாண்டஇயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு திரைப்படங்களில் உதவி இயக்குனராக தன் திரைப்பயணத்தில் அடியெடுத்து வைத்த அட்லீ.. 2013 ஆம் ஆண்டு ’ராஜா ராணி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் . தன் முதல் திரைப்படத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைத்ததற்கு திரையுலகமே யார் இந்த அட்லீ என திரும்பி பார்த்தது.
முதல் படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்து தமிழ் திரையுலகை ஆச்சரியப்பட வைத்த அட்லீ தன் இரண்டாவது படத்திலேயே, கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும், தளபதி விஜய்-யை இயக்கும் வாய்ப்பை பெற்று தமிழ் திரையுலகை திகைக்க வைத்தார். விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய ‘தெறி’ திரைப்படம் எதிர்பார்த்தது போல் விஜய் ரசிகர்களை தெறிக்க விட்டது. அதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திடாத மிடுக்கான போலீஸ் அதிகாரியாக விஜய், அழகு தேவதைகளாக சமந்தா – ஏமிஜாக்சன், வில்லனாக இயக்குனர் மகேந்திரன், என தியேட்டரை தெறிக்கவிட்டது இத்திரைப்படம்.
தெறியின் அமோக வெற்றி மீண்டும் விஜய் வைத்து இயக்கும் வாய்ப்பை அட்லிக்கு பெற்று தந்தது. படத்தின் தலைப்பான மெர்சல் என்ற வார்த்தையே விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகையே அசர வைத்தது. விஜய் மூன்று கெட் அப்பில் நடித்த மெர்சல் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
தன் அடுத்த திரைப்படத்திலும் விஜய் உடன் கூட்டணி வைத்த அட்லீயை பார்த்து திரையுலம் வியந்தது. இம்முறை அட்லீ கையில் எடுத்த திரைக்களம் பெண்களுக்கான கால்பந்து போட்டி.. பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோச் மற்றும் ராயப்பன் ஆகிய இரண்டு கெட்டப்புகளில் விஜய் அசத்தியிருந்த இத்திரைப்படம் தாறுமாறான வெற்றியைக் கண்டது. குறிப்பாக ராயப்பன் கதாபாத்திரம் சொல்லும் ‘கப்பு முக்கியம் பிகிலு’ வசனம் ஏகத்திற்கும் பிரபலமாகி பட்டி தொட்டியெங்கும் பிகிலை கொண்டு சேர்த்தது.
இவற்றைத் தொடர்ந்து இந்திய சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார் அட்லீ. ’ஜவான்’ என பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிப்பதும் இந்திய திரை ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியது. கோலிவுட்டில் வெற்றிகளை குவித்து பாலிவுட்டிலும் கால் பதித்து ’ஆளப்போறன் தமிழன்’ என சொல்லாமல் சொல்லிய அட்லீ தமிழ் சினிமாவின் அதிசயமே.