தென்னிந்திய நடிகருக்கு அமைச்சர் டக்ளஸ் அனுப்பிய கடிதம்
27 Jun,2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை அடுத்து அம் மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை சேகரித்து அனுப்பும் தமது செயற்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்த தென்னிந்திய திரைப்பட நடிகருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இடர்களை எதிர்கொள்ளும் இலங்கை வாழ் எமது மக்களுக்கு 'உதவும் மனிதம்' என்ற உணர்வெழுச்சியுடன் நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதை அகம் மகிழ்ந்து வரவேற்கின்றேன்.
தமிழக மக்களிடமிருந்து அத்தியாவசிய பொருட்களை சேகரித்து நீங்களாகவே எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணி ஈழத்தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவுக்கும், தொன்மைக்குடி உணர்வுக்கும் மறுபடியும் உயிர் கொடுத்திருக்கிறது.
நீங்களே குறிப்பிட்டது போல், வெறும் வாய்ச் சொல்லால் மட்டுமன்றி செயலாலும் இந்தியா எமது மக்களை நேசிக்கின்றது என்பதை உங்கள் 'உதவும் மனிதம்' வெளிப்படுத்தியுள்ளது.
தமிழர்கள், இந்தியர்கள் என இரு அடையாளங்களையும் ஒன்றாக கொண்டிருக்கும் தமிழக மக்களை போலவே,.. நாம் இலங்கையர்கள் என்பதால் தமிழர்கள் என்ற அடையாளத்தையோ,. தமிழர்கள் என்பதால் இலங்கையர்கள் என்ற அடையாளத்தையோ நாம் ஒரு போதும் இழந்துவிட முடியாதவர்கள்.
பேசும் மொழியாலும் கலை கலாச்சார பண்பாட்டு உணர்வுகளாலும் இணையும் எங்கள் உறவுகள் நீடித்து வளரட்டும். உங்கள் மனிதாபிமான உதவிப் பொருட்களை எமது கப்பல் சேவை மூலம் கொண்டு வர நான் ஆவன செய்கிறேன்.
ஆகவே, நம்பிக்கையோடு உங்கள் பணிகளை ஆரம்பிக்கலாம். இது குறித்து ஈழத்தமிழ் மக்களின் சார்பாகவும், இலங்கை அரசு சார்பாகவும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறேன்.