துடிப்பது தமிழ்.தமிழ் என்று...நடிப்பது ஹிந்தி... ஹிந்தி நன்று!
09 May,2022
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக தமிழ்ப் பற்றும், ஹிந்தித் திணிப்பும் என பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழுக்கு ஆதரவாகவும், ஹிந்தித் திணிப்புக்கு எதிராகவும் பல சினிமா பிரபலங்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அதன் மீது பற்றும், பாசமும் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழுக்காகவே தங்களை அர்ப்பணித்தது போல பேசும் சிலர் வெளியில் தமிழ்ஸதமிழ்ஸஎனப் பேசிவிட்டு, திரை மறைவில் ஹிந்திக்கு வலை வீசுவதையும் பார்க்க முடிகிறது.
தமிழ் சினிமாவில் இன்றல்ல கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி சினிமா நட்சத்திரங்கள்தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள். இங்குள்ள தமிழ் பேசத் தெரிந்த, தமிழ் நடிகைகளுக்கு பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வாய்ப்பளிப்பதே இல்லை. தமிழ் நடிகைகளுக்கு சில பல லட்சங்கள் சம்பளம் தந்தாலே போதும். ஆனால், பாலிவுட்டிலிருந்து வரும் நடிகைகளுக்கு கோடிகளில் சம்பளம், அவர்களுடன் வரும் உதவியாளர்களுக்கு சம்பளம் என எத்தனை கோடி செலவானாலும் தரத் தயாராக இருக்கிறார்கள்.
இங்கு வெற்றி பெற்று ஓரளவு பேரும், புகழும் அடைந்த சிலருக்கு உடனே ஹிந்திக்குப் போக வேண்டும் என்று ஆசை. இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலருக்கும் அந்த உண்டு. இங்கிருந்து அங்கு போக வேண்டும் என்ற ஆசையில் சிலர் இருக்க, இங்கு தங்களை நிலை நிறுத்திக் கொள்ள அங்கிருந்து இங்கு ஆட்களை அழைத்து வருபவர்களும் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். அது நடிகை, நடிகர்களுடன் நின்று விடாமல் தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் வரை கூடிக் கொண்டே போகிறது.
ஹிந்தியை தீவிரமாக எதிர்க்கும் திமுக.,வின் வாரிசு நடிகரான உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி. அந்த படம் ஹிந்தி படமான ‛ஆர்டிக்கிள் 15' படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்குமார் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹிந்தித் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிப்பில் நடித்து வருகிறார். “நேர்கொண்ட பார்வை, வலிமை” படங்களைத் தொடர்ந்து தன் 61வது படத்தையும் அவர் தயாரிப்பில்தான் நடிக்கிறார் அஜித்.