முதல்வரை தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்ற ஏ.ஆர்.ரஹ்மான்!
27 Mar,2022
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25/03/2022) துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில், இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த முதலமைச்சர், துபாய் வாழ் தமிழர்களிடையே உரையாற்றினார்.
இந்த திறப்பு விழாவின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்/ துபாய் உலக கண்காட்சியின் ஆணையர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு தனது குடும்பத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது, துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., கீர்த்திகா உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “துபாய் எக்ஸ்போ 2022 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள ‘மூப்பில்லா தமிழே தாயே’ ஆல்பத்தை காண்பித்தார். தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை!” என்று குறிப்பிட்டுள்ளார்.