இந்தியாவின் இசைக் குயில் என்று புகழப்பெற்ற பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.
லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 8-ந்தேதி அவர் தென் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொற்று பாதிப்பு லேசாகவே காணப்பட்டது. ஆனாலும் வயது மூப்பின் காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டதால் கடந்த 29-ந் தேதி அவர் வெண்டிலேட்டரில் இருந்து மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்தனர்.
லதா மங்கேஷ்கர்
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினார்கள். இந்தநிலையில் நேற்று மீண்டும் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் இன்று காலை லதா மங்கேஷ்கர் மரணம் அடைந்தார். ஒரு மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.
லதா மங்கேஷ்கர் விரைவில் குணமடைய வேண்டும் என்று முக்கிய பிரபலங்கள் தங்கள் பிரார்த்தனைகளை தெரிவித்து வந்தனர். அவரது ரசிகர்கள் கோவில்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் லதா மங்கேஷ்கர் மரணம் அடைந்தது அவரது ரசிகர்களிடமும், திரை உலகிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஹேமா. அவரது தந்தையின் நாடகங்களில் லத்திகா என்னும் பாத்திரத்தில் அவர் நடித்து வந்தார். அதனால் அனைவரும் அவரை லதா என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே அவரது பெயராக மாறியது.
அவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் மராத்தி மொழியில் பிரபல பாடகர் ஆவார். நாடக ஆசிரியராகவும் இருந்தார். அவரது 5 குழந்தைகளில் முதல் குழந்தைதான் லதா மங்கேஷ்கர்.
லதா மங்கேஷ்கர் இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். அவர் தனது 13-வது வயதில் பாடல்களை பாடத் தொடங்கினார். 1942-ம் ஆண்டு முதல் பாடலை பாடினார். ‘மகள்’ என்ற இந்தி திரைப்படத்தில் 1949-ம் ஆண்டு முதல் சினிமா பாடலை பாடினார்.
தமிழில் கமல்ஹாசன் நடித்த சத்யா படத்தில் ‘வளை யோசை கலகலவென’, பிரபு நடித்த ஆனந்த் படத்தில் ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்தி மற்றும் மராத்தியில் 8 திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
1999-ம் ஆண்டு நவம்பர் முதல் 2005-ம் ஆண்டு நவம்பர் வரை மேல்சபை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். 1969-ம் ஆண்டு பத்மபூஷண் பட்டத் தையும், 1999-ம் ஆண்டு பத்மவிபூஷண் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
சினிமா துறையில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989-ம் ஆண்டு பெற்றிருந்தார். நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது அவருக்கு கடந்த 2001-ம் ஆண்டு வழங்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றுள்ளார். மேலும் பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.