தீர்ப்புகள் விற்கப்படும்
02 Jan,2022
தீர்ப்புகள் விற்கப்படும்
நடிகர் சத்யராஜ்
நடிகை ஸ்மிருதி வெங்கட்
இயக்குனர் தீரன்
இசை பிரசாத் எஸ்.என்
ஓளிப்பதிவு கருட வேகா ஆஞ்சி
சத்யராஜ் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர். இவர் திருமணமான தனது மகளுக்கு ஏற்பட்ட வன்கொடுமையைத் தட்டிக்கேட்கக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்கிறார். அப்படி என்ன குற்றம் நடந்தது? அதைச்செய்தவர்கள் யார்? என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீரன்.
சத்யராஜ் இளமை தோற்றத்துடன் குற்றவாளிகளைக் கடத்தப்பட்ட நிலையில் அறிமுகமாகிறார். மகளின் நிலைக்காக மனம் கலங்குவதும், கோபத்தில் முகம் சிவப்பதும், கவலைப்படாமல் வில்லனின் தவிப்பதை ரசிப்பதும் என்று அட்டகாசம் செய்திருக்கிறார். படத்தை நகர்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் முழுவதும் பயணிக்கும் ஹரீஸ் உத்தமன், மது சூதனன் இருவரும் பதைக்க வைக்கும் மனிதர்களாக வந்து, பரிதவிப்பது விறுவிறுப்பு.
விமர்சனம்
மகளாக ஸ்மிருதி வெங்கட் அமைதியான நடிப்பில் நம்மைக் கவர்கிறார். அவரது கணவராக வரும் யுவன் மயில்சாமிக்கு மனதில் நிற்கும் பாத்திரம். சார்லி சில காட்சிகளே வந்தாலும் நிறைவு. ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, ஜார்ஜ் ஆகியோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ஒரு சின்ன விஷயத்தைக் கையிலெடுத்துப் பரபரப்பாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் தீரன். சீக்கிரம் ’அது’ கிடைத்து விடவேண்டுமே என்கிற பரிதாபம் நமக்கும் வந்து விடுகிறது. கிளைமேக்ஸ் காட்சி ரசிக்க வைக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்படியெல்லாம் தண்டனை தரலாம் என்று இயக்குநர் தீரன் சமுதாய நோக்கோடு இப்படத்தை கொடுத்து இருக்கிறார்.
விமர்சனம்
சமீபத்திய இளம்பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு தாங்களே துணிச்சலுடன் களம் இறங்க ஆரம்பித்திருக்கும் அளவுக்கு பாலியல் குற்றம் அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில் படம் வந்திருப்பது மிகவும் பொருத்தம். திரைக்கதையில் மட்டும் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் படத்தில் ஒரு வேகம் கிடைத்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் கருட வேகா ஆஞ்சியின் கடும் உழைப்பு தெரிகிறது. இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என் திரில்லர் படங்களுக்குத் தேவையான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ காலத்தின் தேவை.