மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகத்தில் நடமாட முடியாது" - சூர்யாவுக்கு பகிரங்க மிரட்டல்!
12 Nov,2021
நடிகர் சூர்யா ஓடினால் தியேட்டர்களை கொளுத்துவோம் என்றும், அவர் வன்னியர் சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும் காடுவெட்டி குரு மருமகன் மிரட்டல் விடுத்துள்ளார். சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் வெகுவான பாராட்டுகளை பெற்றுள்ளது. நடிகர் சூர்யாவுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ரசிகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ளதாக அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மனோஜ் அளித்துள்ள பேட்டியில், ஜெய்பீம் படத்தில் இருளர் சமுதாயம் எந்த அளவிற்கு ஒடுக்கப்பட்டுள்ளனர் என்பதை எடுத்து காட்டியுள்ளனர் என்பதால் அது மக்களுக்கு தேவையான திரைப்படம் தான் என்று கூறியுள்ளார்.
ஆனால், உண்மை கதை என்றுசொல்லிவிட்டு வில்லனை வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவராக காட்டியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி.
ஆனால் அந்த கதாப்பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குருவை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது, மேலும்சில காட்சிகள் தமிழ்நாட்டில் வாழும் வன்னியர் மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன என கூறியுள்ளார்.
அதேபோல், வில்லனாக காட்டியுள்ள போலீசாரின் வீட்டிற்குள் வன்னியர் சங்க காலெண்டரை தொங்கவிட்டுள்ளனர். அந்த காவல் உதவி ஆய்வாளருக்கு குரு என பெயர் வைத்ததற்கு பதிலாக, தீரன் சின்னமலை என்ன பெயர் வைப்பாரா சூர்யா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்காக நடிகர் சூர்யா ஒட்டுமொத்த வன்னியர் சமுதாய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சூர்யாவின் எந்த படமும் இனி தியேட்டர்களில் ஓட்ட முடியாது. மீறி திரையிட்டால் தியேட்டர்களை கொளுத்துவோம் என மனோஜ் ஆவேசமாக பேசியுள்ளார்.