ஷாருக்கான் மகன் இன்று மாலை சிறையில் இருந்து வெளிவருகிறார்...! ஜாமீன் நிபந்தனைகள் என்ன...?
29 Oct,2021
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், கடந்த 3 ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பொருள் பயன்படுத்தி பார்ட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைக்குப் பின் ஆர்யன் கான் உள்ளிட்டோரை மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அடைத்தனர். இதற்கிடையே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களது ஜாமீன் மனு 2 முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இரண்டு நாட்களாக நடந்து வந்தது. ஷாருக்கான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். இருதரப்பினரிடம் விசாரணை நடத்திய மும்பை ஐகோர்ட்டு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவரின் ஜாமீன் நிபந்தனைகள் குறித்து இன்று (29ம் தேதி) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆர்யன் கான் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று தெரிகிறது.
ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோரின் விடுதலைக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜாமீன்களுடன் தலா ரூ.1 லட்சம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாமீனுக்கான நிபந்தனைகள்
* அனுமதி இல்லாமல் மும்பையை விட்டு வெளியேறக் கூடாது.
* விசாரணைக்கு அழைக்கப்படும் போது போதைப்போருள் தடுப்பு அலுவலகத்திற்கு வர வேண்டும்
* ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை போதைப்போருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
* குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணையை ஆரம்பித்தவுடன் தாமதப்படுத்தக் கூடாது.
* வழக்கைப் பற்றி சமூக ஊடகங்களில் எதுவும் பதிவிடக்கூடாது,
* சிறப்பு நீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது
* பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளில் ஏதேனும் மீறப்பட்டால் ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய விண்ணப்பிக்க போதைப்பொருள தடுப்பு பிரிவுக்கு உரிமை உண்டு என நீதிபதி கூறினார்.