நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது விவகாரத்தில் தினம் தினம் புதிய சர்ச்சைகள் வந்து கொண்டு இருக்கின்றன.
ஏற்கெனவே மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே மீது மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் ஏராளமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கிறார்.
ஆனால் அதனை சமீர் வாங்கடே திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். புதிய திருப்பமாக ஷாருக்கான் மகன் ஆர்யனை விடுவிக்க பணம் கைமாறியது என்று இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள பிரபாகர் என்பவர் தெரிவித்ரிருக்கிறார்.
ஏற்கெனவே இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தனியார் துப்பறியும் நபர் கேபி கொசாவி என்பவர் ஆர்யனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
கொசாவி மீது மோசடி வழக்கு புனேயில் நிலுவையில் இருக்கிறது. தற்போது கொசாவி தலைமறைவாகிவிட்டார். அவரை புனே போலீஸார் தேடி வருகிறனர்.
கொசாவிடம் பாதுகாவலராக இருந்த பிரபாகர்தான் புதிய குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அக்டோபர் 2-ம் தேதி கப்பலில் ஏறும் இடத்தில் நான் நின்றபோது சிலரைக் காட்டி அடையாளம் காட்டும்படி கேட்டுக்கொண்டனர்.
அவர்களை அடையாளம் காட்டுவதற்காக எனக்கு வாட்ஸ் அப்பில் சில புகைப்படங்களை அனுப்பி அவர்கள் யார் என்று குறிப்பிட்டிருந்தனர். இரவில் அங்கு கொசாவியைச் சந்தித்துப் பேசினேன்.
கொசாவியும், சமீர் வாங்கடேயும் என்னிடம் சில வெற்றுப்பேப்பர்களில் கையெழுத்துப்போடும் படி கேட்டுக்கொண்டனர்.பின்னர் சாம் டிசோசா என்பவருடன் கொசாவி காரில் செல்லும்போது போனில் பேசினார்.
அருகில் இருந்து நான் அதனை கேட்டுக்கொண்டே வந்தேன். சாம் டிசோசாவிடம் ரூ.25 கோடி கேளுங்கள் என்றும் அதனை 18 கோடியில் முடித்துக்கொள்ளலாம் என்று கொசாவி தெரிவித்தார்.
நாம் சமீருக்கு ரூ.8 கோடி கொடுக்கவேண்டியிருக்கிறது என்றும் தெரிவித்தார். அதே நாளில் மாலையில் சாம் டிசோசா, கொசாவி மற்றும் ஷாருக்கான் மேலாளர் பூஜா ஆகியோர் காரில் சந்தித்து 15 நிமிடம் பேசினர்.
என்னிடம் குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு சென்று பணத்தை வாங்கி வரும்படி கேட்டுக்கொண்டனர்.
நான் வெள்ளைக்காரில் வந்தவர்களிடம் பணம் இருந்த இரண்டு பேக்கை வாங்கி வந்து கொடுத்தேன்.
அதனை காரில் வைத்து எண்ணிப்பார்த்த போது 38 லட்சம் இருந்தது” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் இக்குற்றச்சாட்டை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்திருக்கின்றனர்.
அவ்வாறு பணம் கைமாறியிருந்தால் ஏன் குறிப்பிட்ட நபர் சிறையில் இருக்கவேண்டும் என்று அந்த அதிகாரி கேள்வி எழுப்பினார்.