பிரபல நடிகர் சோனு சூட், 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். போலியான நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கியதாக சோனு சூட் கணக்கு காண்பித்துள்ளார் என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டு, நடந்தது என்ன?
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், தமிழில் அருந்ததி, ஒஸ்தி போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழக ரசிகர்களை ஈர்த்தவர். 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கிய நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக சூட் அறக்கட்டளை தொடங்கி பல உதவிகளை அளித்து புகழ் பெற்றார். இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக, மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், குல்ருகிராம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் சோனு சூட்டுக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை வருமான வரித் துறை அதிகாரிகள் விரிவான அறிக்கை வெளியிட்டுள்னர். அதில், சோனு சூட், 20 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த வரிஏய்ப்புக்காக, அவர் பல போலி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கியதாகக் கணக்கு காண்பித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த நிறுவனங்களுக்கு பணத்தைக் கொடுத்த சோனு சூட், அதே பணத்தை செக் மூலம் கடன் என்ற பெயரில் வாங்கிப் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் லக்னோவில் உள்ள ஒரு ரியல் எஸ்டே்ட நிறுவனத்தில், சோனு சூட் பங்குதாரராக உள்ளார். அந்த நிறுவனம் 65 கோடி ரூபாய் மதிப்புக்கு போலி ஒப்பந்தங்களை மேற்கொண்டிருப்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது.
சோதனையின் போது அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சூட் அறக்கட்டளையில், வெளிநாடுகளில் இருந்து 18 கோடி ரூபாய் நிதியுதவி வந்ததாகவும் அதில், வெறும் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மட்டும் நலத்திட்டங்களுக்கு செலவழிக்கப்பட்டதாகவும் மீதிப் பணம் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சோனு சூட் சமீபத்தில், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த அதிரடி சோதனை நடந்துள்ளது. இந்த சோதனை உள்நோக்கம் கொண்டதென, மகாராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனாவும், ஆம் ஆத்மியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.