சென்னை: ஜகமே தந்திரம் படத்தை பார்த்து விட்டு பல ஈழத் தமிழர்களும் இதே கருத்தை முன் வைத்த நிலையில், நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள நவரசாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் ஈழ பிரச்சனையை தொட்டுள்ளதற்கு எதிராக ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
சினிமா கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்ய அத்தனை முன்னணி நடிகர்களும் சம்பளம் கூட வாங்காமல் முன் வந்த நிலையில், இயக்குநர்கள் இன்னமும் மெனக்கெட்டு நல்ல கதைகளை கொடுத்திருந்தால் நவரசா சர்வதேச அளவில் பேசப்பட்டு இருக்கும் என்பதே பலரது வாதமாக உள்ளது.
ஏமாற்றிய நவரசா
நவரசா ஆந்தாலஜியில் மொத்தம் 9 இயக்குநர்கள் தங்களுக்கு தெரிந்த மொத்த வித்தையும் இறக்கி 9 குறும்படங்களை உருவாக்கி உள்ளனர். இதில் ஒரு சில மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால், பல கதைகள் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது ஒட்டுமொத்த நவரசாவையும் ரசிக்கும் படி செய்யவில்லை என்பதே ஒடிடி ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்
அதில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கெளதம் மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான பீஸ் - சாந்தி கதை இலங்கை தமிழர்கள் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது. மறுபடியும் அதே மரமா என்பது போல மீண்டும் ஈழ பிரச்சனையை கையில் எடுத்த கார்த்திக் சுப்புராஜை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பர்னிச்சர் உடைச்சாச்சு
தனுஷ் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான ஜகமே தந்திரம் படத்திலும் இதே போல ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து எந்த அளவுக்கு பர்னிச்சரை உடைக்க முடியுமோ அந்த அளவுக்கு உடைச்சாச்சு.. இப்போ மறுபடியும் நெட்பிளிக்ஸின் நவரசாவிலும் உடைக்க வந்துட்டீங்களா என வெளுத்து வாங்கி வருகின்றனர்.
மகா பிரபு இங்கேயும் வந்துட்டீங்களா
மேலும், மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். போதும் டா சாமி இனிமேல் இலங்கை தமிழர்கள் பிரச்சனையை யாரும் சினிமா எடுத்து காசு பார்க்க வேண்டாம் என்றும் கண்டன பதிவுகளும் அதிகம் கண்ணில் தென்படுகின்றன.
என்ன கதை
இப்படி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் கழுவி ஊற்றும் அளவுக்கு அப்படி என்ன கதையை எடுத்து வைத்திருக்கிறார் என்று பார்ப்போம். விடுதலை புலிகளான கெளதம் மேனன், பாபி சிம்ஹா மற்றும் சந்தீப் கிஷன் பதற்றமான இடத்தில் மறைமுகமாக உள்ளனர். அங்கே வரும் ஒரு சிறுவன் தனது தம்பியை வீட்டில் விட்டு விட்டு வந்து விட்டதாக கூறி அழுகிறான்.
பாவப்பட்ட பாபி சிம்ஹா
அந்த சிறுவனின் பேச்சைக் கேட்டு பாவப்படும் பாபி சிம்ஹா, அந்த சிறுவனுக்கு உதவ தனது டீமுடன் முன்னேறி செல்கிறார். தனியாளாக சிங்களர்கள் இருக்கும் இடத்திற்குள் சென்று அந்த சிறுவனின் தம்பியை மீட்க முயற்சிக்கிறார். வீட்டுக்குள் சென்று பார்த்தால் செம ட்விஸ்ட். அங்கே தம்பியே இல்லை.
நாய்க்குட்டி
அந்த சிறுவனிடம் கோபமாக கேட்க, அங்கே இருக்கும் நாய்க்குட்டி தான் தனது தம்பி வெள்ளையன் அதனை காப்பாற்றுங்கள் என சொல்ல அதனை தூக்கிக் கொண்டு வெளியேறும் போது சிங்கள படை சுட ஆரம்பிக்கிறது. பின்னர் நாய்க்குட்டியை தூக்கிட்டுப் போறேன் என இவர் கையசைத்துக் காட்ட சுடுவதை நிறுத்துகிறது.
என்ன சொல்ல வரீங்க
இவரும் ஜாலியா நாய்க்குட்டியை காப்பாற்றி செல்கிறார். போனவர் சும்மா இல்லாமல், சிங்கள ராணுவத்தினருக்கும் இரக்கம் இருக்கிறது. அவங்களுக்கு நன்றி சொல்லணும் என எட்டிப் பார்த்து நன்றி சொல்ல இவரை சுட்டு வீழ்த்துகின்றனர். அத்துடன் கதை முடிகிறது. இதில் என்னத்த சொல்ல வருகிறார் கார்த்திக் சுப்புராஜ் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நாய்க்குட்டிக்கு காட்டும் இரக்கத்தை கூட ஈழத் தமிழர்களுக்கு சிங்களம் காட்டுவதில்லை என்பதையே சுட்டுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என்றும் ரசிகர்கள் விளக்கி வருகின்றனர்.