சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புகிறேன் - ‘ஆக்ஷன் சூப்பர் ஸ்டார்’ ஜாக்கி சான் ஜாக்கி சான்.
13 Jul,2021
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம் உள்ளதாக திரைப்படங்களில் தனது சாகசத் திறமையினால் உலகம் நெடுகிலும் அதிக அளவில் ரசிகர்களை வென்றுள்ள நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.
67 வயதாகும் ஜாக்கி சான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்து வருகிறார். ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த, அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைபடுத்தியது. இதை எதித்து, ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக, நடிகர் ஜாக்கி சான் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து இவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சீன திரைப்பட சங்கத்தின் துணை தலைவராக பதவி வகித்து வரும் ஜாக்கி சான், பீஜிங்கில் நேற்று நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “கடந்த சில ஆண்டுகளில் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதை பல நாடுகளுக்கு செல்லும்போது நேரடியாக உணர்ந்து உள்ளேன். சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.
ஐந்து நட்சத்திரங்களை உடைய நம் சிவப்பு கொடிக்கு, உலகம் முழுதும் மரியாதை உள்ளது.சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது. எனவே, அக்கட்சியில் உறுப்பினராக இணைய ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 100 ஆண்டுகாலம் ஆவதையொட்டி அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி திரைப்படத் துறையின் டாப் நடிகர்கள் உட்பட பலரையும் அழைத்திருந்தது.
இதில் தான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விரும்புவதாக அவர் தெரிவித்தார். 2013 முதல் ஜாக்கி சான் சீன மக்கள் ஆலோசனை மாநாட்டில் உறுப்பினராக இருந்து வருகிறார் ஜாக்கி சான்.
“ஹாங்காங்கும், சீனாவும் எனது தாய்வீடு. சீனா என் நாடு. நான் என் நாட்டை நேசிக்கிறேன், என் தாய்நாட்டை நேசிக்கிறேன். ஹாங்காங்கில் விரைவில் அமைதி திரும்பும்” என்றார் ஜாக்கி சான்