கதாநாயகர்கள் இல்லாமல் நடிகைகளை மையப்படுத்தி தயாராகும் அதிக படங்கள்
06 Jul,2021
தமிழ் பட உலகில் சமீபகாலமாக கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி அதிக படங்கள் தயாராகின்றன. ஏற்கனவே ஜோதிகா நடிப்பில் ராட்சசி, நாச்சியார், ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், நயன்தாரா நடித்து அறம், கோலமாவு கோகிலா, ஐரா, கொலையுதிர் காலம், மூக்குத்தி அம்மன். அனுஷ்கா நடிப்பில் பாகுமதி, சைலன்ஸ் ஆகிய படங்கள் வந்தன.
திரிஷா நடித்த மோகினி, பரமபதம் விளையாட்டு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் உள்ளிட்ட படங்களும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகவே வந்தன. தற்போது மேலும் பல படங்கள் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி தயாராகின்றன.
நயன்தாரா கண்பார்வையற்றவராக நடிக்கும் நெற்றிக்கண் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை. இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. திரிஷா கர்ஜனை, ராங்கி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
கங்கனா ரணாவத் நடித்துள்ள தலைவி படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. சமந்தா சாகுந்தலம் என்ற படத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் பூமிகா, ரெஜினா நடிக்கும் சூர்ப்பனகை, காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படங்களும் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் கதையம்சம் கொண்டவை.
இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. மேலும் பல படங்கள் கதாநாயகிகளை வைத்து தயாராகின்றன.