மனைவியிடம் விவாகரத்து பெற்ற அமீர்கான் - பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி!
04 Jul,2021
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது 53 வயதாகும் அமீர்கானுக்கு 1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு மனைவி ரனா தத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணத்தால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
அதையடுத்து 2005ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். கிரண் ராவ் அமீர்கான் நடித்த லகான் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர்கள் இருவருக்கும் அசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தார்.
இந்நிலையில் அமீர் கான் மனைவி கிரண் ராவ்வை திடீர் விவாகரத்து செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், " இந்த 15 ஆண்டுகால அழகான வாழ்க்கையில் நாங்கள் எங்கள் அனுபவங்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளோம். எங்களது உறவானது நம்பிக்கை, அன்பு,மரியாதையில் வளர்ந்தது. நாங்கள் எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாத்தை தொடங்க விரும்புகிறோம். இனி கணவன் - மனைவியாக அல்ல. ஆனால் ஒரு இணை பெற்றோராக ஒரு குடும்பமாக இருப்போம்.
சில காலங்களுக்கு முன்பாகவே நாங்கள் பிரிவது குறித்து திட்டமிட்டோம். தற்போது அந்த பிரிவை முறைப்படுத்துவதை வசதியாக உணர்கிறோம். நாங்கள் எங்கள் மகன் ஆசாத்துக்கு நல்ல பெற்றோராக இருப்போம். திரைப்படங்கள் மற்றும் பானி அறக்கட்டளை மற்றும் நாங்கள் விரும்பும் திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றுவோம். தொடர்ச்சியாக எங்களுக்கு அதரவளித்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எங்களது நன்றி. இந்த விவாகரத்து ஒரு முடிவு அல்ல. ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக நீங்கள் காண்பீர்கள். உங்கள் அன்பிற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.