எனக்கும் பாலியல் தொல்லை
08 Jun,2021
தமிழ் சினிமா மாதிரி, மலையாள சினிமா இல்லை. சினிமா துறையில் எனக்கும் பாலியல் தொல்லை நேர்ந்துள்ளது' என, கவர்ச்சி நடிகை சோனா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி, காமெடி, குணச்சித்திர நடிகை மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்தவர் சோனா. அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது, 'கலர்ஸ் டிவி'க்காக, 'அபி டெய்லர்ஸ்' தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது குறித்து, சோனா கூறியதாவது:எனக்கு அடையாளம் தந்தது சினிமா தான். சினிமா தான் என் வாழ்க்கை. சின்னத்திரையில் இருந்து பல ஆண்டுகளாகவே வாய்ப்புகள் வந்தன. 'அபி டெய்லர்ஸ்' தொடரில் வித்தியாசமான பாத்திரம் என்பதால் ஏற்று நடிக்கிறேன். தமிழில் கவர்ச்சி வேடங்களில் நடிக்கவே அழைப்பு வருகிறது; மலையாளத்தில் அப்படி இல்லை. அங்கு மாறுபட்ட பாத்திரங்கள் தருகின்றனர். பாலியல் குற்றங்கள் எல்லா துறையிலும் இருக்கின்றன.
பாலியல் குற்றங்கள் எங்கு நடந்தாலும், முறையான விசாரணையும், தண்டனையும் அவசியம். சில ஆண்டுகளுக்கு முன், எனக்கும் அது போல நடந்தது. அப்போதே, அதை வெளிப்படையாக சொல்லி போராடினேன். நமக்கான உரிமைக்கு நாம் தான் போராட வேண்டும். அதற்காக, அதை கடந்து செல்லாமல் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது நல்லதல்ல.உங்களுக்கு நடந்தால் அதை வெளிப்படுத்துங்கள்; உங்கள் உரிமைக்கு குரல் கொடுங்கள். எதுவும் நடக்காவிட்டால், அதை கடந்து செல்லுங்கள்; வாழ்க்கை பெரியது. எனக்கு நடந்ததை கடந்து வந்து விட்டேன்.இவ்வாறு, அவர் கூறினார்.