வைரமுத்துவுக்கு எதிர்க்கும் நடிகை பார்வதி - என்ன காரணம்?
27 May,2021
மலையாள கவிஞரும் பாடலாசிரியருமான ஒஎன்வி குறுப்புவின் பெயரில் உள்ள இலக்கியத்துக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது கிடைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக வைரமுத்து கூறியிருந்த நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வைரமுத்துவின் இலக்கிய பயணம் எல்லைகளைக் கடந்து உலகளாவிய விருதுகளை பெற்றுத் தொடரட்டும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஒஎன்வி விருதுக்குத் தேர்வான வைரமுத்துவுக்கு அந்த விருது வழங்கப்படுவதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒ.என்.வி ஐயா எங்களுடைய பெருமை. ஒரு கவிஞராக, பாடலாசிரியராக அவர் வழங்கிய பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. அது நமது கலாசாரத்தை எவ்வாறு வளர்த்தது, அவரது உடல் உழைப்பால் நமது இதயமும் மனதும் பயனடைந்தன. பாலியல் தாக்குதல் குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரில் அத்தகைய விருதை வழங்குவது மிகவும் அவமானத்துக்குரியது, என்று பார்வதி கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து மீது பாலியல் சீண்டல் புகார் சுமத்தியிருந்தவர் திரைப்பட பாடகி சின்மயி. மீ டூ இயக்கம் தமிழ்நாட்டில் எதிரொலித்த காலத்தில் சின்மயி வைரமுத்துக்கு எதிராக சுமத்திய புகார் பரபரப்பாக பேசப்பட்டது.ஆனால், அதன் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், பாடகி சின்மயி, வைரமுத்துவுக்கு ஒ.என்.வி விருது கிடைத்த தகவலை மேற்கோள்காட்டி, ஒ.என்.வி கலாசார அகாடமியின் ஒ.என்.வி இலக்கிய விருதை வைரமுத்து பெறுகிறார். இதற்காக மறைந்த ஒ.என்.வி பெருமைப்படுவார் என்று கூறியுள்ளார்.
சின்மயியின் இடுகை ட்விட்டர் பக்கத்தில் வைரலானதையடுத்து, பல்வேறு பிரபலங்களும் வைரமுத்துக்கு ஒ.என்.வி விருது அறிவிக்கப்பட்ட செயல்பாட்டை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
பெண் பத்திரிகையாளர் தான்யா ராஜேந்திரன், ஒ.என்.வி. கலாசார அகாடமி வைரமுத்துக்கு விருது அறிவிக்கும் அறிக்கையை தமது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து, வைரமுத்துவைத் தவிர வேறு யாரும் இந்த விருதுக்கு தகுதி பெறவில்லையா? ஏன்? என்று கேட்டுள்ளார்.
தலைவர் அடூர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, தேர்வுக்குழுவே தேர்வு செய்தது என்கிறார். தேர்வுக்குழு, தலைவர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என அகாடமியில் அங்கம் வகிக்கும் எல்லோருக்கும் இது சரிதானா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.