அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் - கமல்ஹாசன்
24 May,2021
என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல், முருகானந்தம், ஐஏஎஸ் சந்தோஷ் பாபு, பத்மப்ரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி உள்ளனர். கட்சியில் இருந்து விலகிய அனைவரும், அடுக்கடுக்காக கமல்ஹாசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, மாற்றம் என்றும் மாறாது நிகழ்ந்துகொண்டே இருக்கும். அரசியல் மாற்றம் நாட்டில் ஏற்பட, நாம் ஏற்றிய கொடி பறந்துகொண்டு இருக்கிறது. நேர்மை வழியில் மாற்றத்தை தேடுபவர்களாய் நாம் உள்ளவரையில் நம் கொடி புத்தொளியோடு பறந்துகொண்டே இருக்கும். மூச்சுள்ளவரை அதன் பாதுகாவலனாய் நான் இருப்பேன்.
தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்பது நாம் கண்ட சரித்திரம். முக அறிமுகம் இல்லாதவர்களை மக்களிடம் மின்ன வைக்க நான் நினைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகாரமாய் தெரிகிறது. பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு காலம் பதில் சொல்லும். கூட்டணி வைத்துக் கொள்வதில் நாம் காட்டிய வெளிப்படைத்தன்மை அனைவரும் அறிந்ததே. தோல்வியை கொட்ட குழி தேடுவது ஜனநாயகம் அல்ல.
நாடோடிகள் ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்கள் வியாபாரம் முடியும் வரை மட்டுமே தங்குவார்கள். சென்றவர்கள் திரும்பி வந்தால் அவர்களை சேர்த்து கட்சியை மீண்டும் மாசுபடுத்த விடமாட்டோம். தொண்டர்கள் நம் தரம் குறையாமல் வாதாடலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்றும் உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை விரைவில் காண்பீர்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.