சமந்தா முதன்முறையாக ஹிந்தியில் நடித்துள்ள ‛தி பேமிலிமேன் 2' வெப்சீரிஸில் தமிழர்களையும், விடுதலை புலிகளையும் தவறாக சித்தரித்துள்ளதாக கூறி அந்த தொடரை தடை செய்ய வேண்டும் என தமிழகத்தில் எதிர்ப்பு குரல் எழும்பி உள்ளது.
ராஜ் - டிகே இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்துள்ள ஹிந்தி வெப்சீரிஸான ‛தி பேமிலி மேன்2' விரைவில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது. அதில் தமிழ் பேசும் சமந்தாவை பயங்கரவாதி போலவும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது போலவும் காட்டியுள்ளனர். குறிப்பாக தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த டிரைலர் வெளியான அன்றே இந்த வெப்தொடருக்கு எதிராக டுவிட்டரில் கண்டனங்கள் எழுந்தன. இந்த தொடரை ஒளிபரப்ப கூடாது என ஹேஷ்டாக் ஒன்றையும் உருவாக்கி டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.
பொதுவாக ஓடிடியில் வெளியாகும் இதுபோன்ற வெப்சீரிஸ் தொடர்களுக்கு சென்சார் இருப்பதில்லை என்பதால் மனம் போன போக்கில் படங்கள் வெளியாகிறது.
இந்நிலையில் ‛‛தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் 'தி பேமிலி மேன் 2' இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சீமான் கண்டனம்
அவர் வெளியிட்ட அறிக்கை : “அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, 'தி பேமிலி மேன் 2' எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் பேரதிர்ச்சி தருகின்றன. விடுதலைப்புலிகளைத் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
latest tamil news
ஹிந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல.
உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத் தொடரின் வாயிலாகத் பயங்கரவாதிகள் எனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது. அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, தி பேமிலி மேன் 2 எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும். அதனைச் செய்ய மறுத்து தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்''.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமந்தாவிற்கும் எதிர்ப்பும்
வெப்சீரிஸிற்கு மட்டுமல்ல இந்த தொடரில் நடித்த சமந்தாவுக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழர்களை சமந்தா இழிவுப்படுத்தியுள்ளார் என்றும் சிலர் போர்கொடி துாக்கியுள்ளனர்.
latest tamil news
டுவிட்டரில் எழுந்த கண்டனங்கள்
‛பேமிலிமேன் 2' வெப்சீரிஸிற்கு எதிராக டுவிட்டரில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
அதில் பதிவான சில கருத்துக்கள் இங்கே...
தமிழர்கள் தீவிரவாதிகளா. சமந்தா நீங்கள் தமிழ் பெண்ணா? தமிழ் இனத்தின் மீளாத துயரம் அகலா துன்பங்கள் உங்களுக்கு எப்படி தெரியும். சினிமா என்பது பொழுதுபோக்கு, தன் உணர்வு காயப்படுத்த அல்ல. நீங்கள் பிறந்த தமிழ் மண்ணுக்கு துரோகம் செய்யாதீர்கள்.
தயாரிக்க கதைகள் இல்லாத முட்டாள்கள் எனில் எங்கள் தமிழ் மன்னர்களையும் சுதந்திர போராட்ட வீரர்களின் ஒரு மாத வாழ்க்கை முறையே உங்களுக்கு ஆயிரமாயிரம் கதைகள் சொல்லும்.
வரலாறுகளை படமாக்க முயன்ற காலம் போயி, இப்ப படங்களை வரலாறாக்க முயற்சி செய்கிறார்கள். அகிம்சைக்கு எதிரான வன்முறையே தீவிரவாதம் வன்முறைக்கு எதிரான வன்முறையை தீவிரவாதமாக சித்தரிப்பதே இவர்களின் சித்து விளையாட்டு.
நேற்றைய(மே 18) நினைவேந்தலில் கலங்கி இருக்கும் எங்களுக்கு இன்றைய ஆறுதலாக மேலும் எங்களை கலங்க வைக்க உங்கள் முன்னோட்டம். இதை ஏற்க முடியாது. பாலிவுட் உலகம் எதற்காக தமிழீழர்களை வெறுப்பாளர்களாக சித்தரிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதற்கு நிச்சயம் அவர்கள் பதில் பெறுவார்கள்.
புகார் தெரிவிக்க
இதனிடையே ஒரு படமோ, நாடகமோ, வெப்சீரிஸோ எதுவாக இருந்தாலும் அதில் ஆட்சபேத்திற்குரிய விஷயங்கள் இடம்பெற்றால் அதுகுறித்த புகாரை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். அதன்படி ‛பேமிலிமேன் 2' வெப்சீரிஸ் தொடரை எதிர்ப்பதற்கான காரணத்தை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ்கண்ட முகவரி, இ-மெயலில் புகார்களாக தெரிவிக்கலாம்.
Joint Secretary ( P&A ),
M/O Information & Broadcasting,
Room No 552, A wing Shastri Bhawan New Delhi-110001
E-Mail - jspna-moib@gov.in