நடிகர் மாறன் மரணம் - இரண்டு நாட்களில் இறந்த இரண்டாவது நடிகர்
12 May,2021
கொரோனோ பெருந்தொற்றால் நடிகர் மாறன் உயிரழந்துள்ளார். அவரது மரணம் ,தமிழ் திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. பொதுமக்களும், திரைத்துறை கலைஞர்களும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் கே.வி. ஆனந்த், நடிகர் பாண்டு, நெல்லை சிவா என திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றாலும், உடல்நல குறைவாலும் காலமாகினர்.
தற்போது துணை நடிகர் மாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 48.
2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'கில்லி' படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யின் நண்பராக இவரது கதாப்பாத்திரம் மிகவும் புகழ்பெற்றது. அதன் பிறகு, 'டிஷ்யூம்', 'தலைநகரம்', 'வேட்டைக்காரன்', 'கே.ஜி.எஃப்' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல், கானா பாடல்கள் பாடுவது, மேடை கச்சேரிகள் என இதிலும் கவனம் செலுத்தி வந்தார் மாறன்.தற்போது வெளியாக இருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை', 'ஆண்டி இந்தியன்' உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த இவர் கொரோனா தொற்று காரணமாக அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில்தான் நடிகர் மாறன் உயிரிழந்துள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.