கருணாஸ் எம்.எல்.ஏ. வீட்டுக்காவலில் வைப்பு
26 Mar,2021
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் போராட்டம் நடத்தப்போவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.
கருணாஸ் எம்.எல்.ஏ. வீட்டுக்காவலில் வைப்பு
சிவகங்கை அருகே தோட்டத்து வீட்டில் கருணாஸ் எம்.எல்.ஏ. வீட்டுக்காவில் வைக்கப்பட்ட போது எடுத்த படம்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றும், இன்றும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் போராட்டம் நடத்தப்போவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை முதல்-அமைச்சர் காரைக்குடிக்கு வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் நடிகர் கருணாஸ் சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் இருப்பதாக சிவகங்கை நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று கருணாசை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர்.
இதனை அறிந்து அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.