தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் கமல்ஹாசன்
20 Feb,2021
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி மதுரையில் தொடங்கினார். கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா நாளை (ஞாயிறு) நடைபெற உள்ளது. இதையொட்டி பெரிய அளவில் மாநாடு நடத்த திட்டமிட்டனர். ஆனால் மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
எனவே அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி மாநாடு நடத்த முடிவு செய்துள்ளனர்.
கட்சியின் தொடக்க விழாவை அரங்க நிகழ்ச்சியாக நடத்துகின்றனர். நாளை காலை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி உள் அரங்கத்தில் கமல் தலைமையில் விழா நடைபெறுகிறது.
விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் பற்றி நாளைய கூட்டத்தில் விவாதிக்கின்றனர்.
ஏற்கனவே ஆம்-ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அந்த கட்சியின் மாநில தலைவர் கடந்த வாரம் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனும் கூட்டணி தொடர்பாக கமல் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த கூட்டணி உறுதியாகும் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
நாளை தொடக்க விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் மாலையில் பத்திரிகையாளர்களை கமல் சந்திக்கிறார். அப்போது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? போன்ற முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.