காதலிக்கும் கதாநாயகன் கதாநாயகிக்கு அப்பாக்கள் ஆதரவு, எதிர்ப்பு படம் பாரீஸ் ஜெயராஜ் - விமர்சனம்
20 Feb,2021
நடிகர்: சந்தானம் நடிகை: அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரா டைரக்ஷன்: ஜான்சன் கே இசை : சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு : ஆர்தர் கே.வில்சன்ஜான்சன் இயக்கி வெளிவந்த ‘ஏ-1’ படக்குழுவினர் மீண்டும் இணைந்து, ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
சந்தானம் கதாநாயகனாக நடித்து, ஜான்சன் இயக்கி வெளிவந்த ‘ஏ-1’ படக்குழுவினர் மீண்டும் இணைந்து, ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தை கொடுத்து இருக்கிறார்கள். இதில், சந்தானம் கானா பாடகராக வருகிறார். அவருடைய முதல் காதல் தோல்வியில் முடிய-இரண்டாவதாக அனைகாவை காதலிக்கிறார்.
இந்த காதலுக்கு முதலில் ஆதரவு தரும் அவருடைய அப்பா பிருதிவிராஜ், பின்னர் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். காதலி அனைகாவின் தந்தையும் இவர்களின் காதலை ஏற்க மறுக்கிறார். சந்தானம்-அனைகா காதலுக்கு முதலில் ஆதரவு தெரிவித்த அவர்களின் தந்தைகள், பிறகு எதிர்ப்பது ஏன்? என்பது மீதி கதை.
சந்தானம் படம் முழுக்க வருகிறார். வார்த்தைக்கு வார்த்தை தமாசாக பேசி, சிரிக்க வைக்கிறார். சுறுசுறுப்பாக சண்டையும் போடுகிறார். ஒரு கதாநாயகனுக்கு உரிய கடமைகளை மிக சரியாக செய்து இருக்கிறார். அவருடன் இணைந்து மொட்டை ராஜேந்திரனும் கலகலப்பூட்டுகிறார். சின்ன சின்ன வேடங்களில் வந்துபோகும் புதுமுக நடிகர்களும் தியேட்டர் அதிர சிரிக்க வைக்கிறார்கள்.
சந்தானத்தின் அப்பாவாக வரும் பிருதிவிராஜுக்கு முக்கிய வேடம். அவர் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறபோதெல்லாம் ‘காமெடி’ களை கட்டுகிறது.
கதாநாயகி அனைகா அழகாக இருக்கிறார். இவருக்கும், நடிப்புக்கும் தூரம் அதிகம் போலும்.
சந்தோஷ் நாராயணன் இசையில், ‘‘புளி மாங்கா புளிப்’ பாடல் தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் காதுகளில் ஒலிக்கிறது. ஜான்சன் டைரக்டு செய்து இருக்கிறார். படத்தின் முதல் பாகம் சோர்வாக கடந்து செல்கிறது. இரண்டாம் பாகத்தில் வட்டியும், முதலுமாக நகைச்சுவை விருந்து. கடைசி காட்சிகளில், மிகையான திருப்பங்கள்.