மாஸ்டர்: இன்டர்நெட்டில் கசிந்த காட்சிகள் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கமான வேண்டுகோள்
11 Jan,2021
வரும் 13ஆம்தேதியன்று திரைக்கு வரவிருக்கும் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்பட காணொளி என கூறப்படும் படத்தின் காட்சிகள், இன்டர்நெட்டில் கசிந்திருப்பது அந்த திரைப்படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
நடிகர் விஜய் கதாநாயனாகவும் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடிக்கும் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை திரையரங்குகளில் திரையிட வசதியாக திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய்யும படக்குழுவினரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடந்த மாதம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்கள் முதல்வரை சந்தித்த அடுத்த சில நாட்களிலேயே தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால், கொரோனா பரவல் தணியாத சூழலில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி வழங்கிய அரசின் நடவடிக்கை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது.
பிறகு இந்திய உள்துறை செயலாளர் தலையிட்டு தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதி, 50 சதவீத பார்வையாளர் அனுமதியை மட்டுமே உறுதிப்படுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியிருந்தார். இதையடுத்து 50 சதவீத பார்வையாளர்களுடனேயே திரையரங்குகள் இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கூறியது.
நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் படக்காட்சிகள் எனக்கோரும் காணொளிகள் இன்டர்நெட்டில் கசிந்து பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இதையறிந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் படக்காட்சிகளை அவரது ரசிகர்கள் யாரும் இன்டர்நெட்டில் பகிரக்கூடாது என்றும் படம் திரைக்கு வரும்வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் எழுதிய குறிப்பில், ஒன்றரை வருட போராட்டத்துக்குப் பிறகு மாஸ்டர் படத்தை உங்களின் பார்வைக்கு வழங்கவிருக்கிறோம். அதை திரையரங்குகளில் மட்டுமே நீங்கள் பார்த்து மகிழ வேண்டும் என நம்புகிறோம். ஒருவேளை படக்காட்சிகளை இன்டர்நெட்டில் பார்க்க நேர்ந்தால் அதை தயவு செய்து பகிராதீர்கள். அத்தகைய காட்சியை பார்க்க நேர்ந்தால் report@blockxpiracy.com என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தருமாறு லோகேஷ் கனகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல, மாஸ்டர் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இன்டர்நடெ் காட்சிகளை பகிராமல் புகார் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.