தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி நிகழ்வுகளை நடத்தி தன்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, புதிய கட்சி ஒன்றைத் துவங்கி அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துவந்த ரஜனிகாந்த், சில நாட்களுக்கு முன்பாக அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். தன்னுடைய உடல்நிலையின் காரணமாக தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிக்கை ஒன்றின் மூலமாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்த நிலையில், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை அவரது ரசிகர்கள் நடத்தினர். இதில் பெரும் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
"நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும் மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்போது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவைக் கூறிவிட்டேன்.
தயவுகூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தன்னுடைய அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
உடல்நலப் பிரச்சனைகளை காரணமாகக் கூறி தனது அரசியல் பிரவேசத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்திருந்த சூழ்நிலையில், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து அரசியலில் ஈடுபட வேண்டுமென்று கோரி நேற்று (ஜனவரி 10) அவரது ரசிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில், 300க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ரசிகர் ஒருவர், "ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அவர் இப்போது சுற்றுப்பயணத்தில் ஈடுபட வேண்டுமென்றும், மேடை ஏற வேண்டுமென்றும் நாங்கள் கேட்கவில்லை. அவர் ஒரு தொலைக்காட்சி பேட்டி மட்டும் கொடுத்தால் போதும், மீதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவர் முகம் காட்டினாலே போதும், ஓட்டுகள் தானாக விழுந்துவிடும்" என்று கூறினார்.