ரஜினிகாந்தை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்; யாரும் எதிர்பாராத திருப்பம்!
07 Jan,2021
ரஜினிகாந்தை கட்டாயப்படுத்தி, அரசியலுக்கு வரவழைக்கும் முயற்சியாக வருகிற 10-ந்தேதி சென்னையில் ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர், மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தன்னுடைய உடல்நிலை குறித்தும், டாக்டர்கள் ஆலோசனைகளையும் மீறி அரசியலுக்கு வந்தால், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பி வரும் மக்கள் துன்பபடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தையும், தான் அரசியலுக்கு வர முடியாத சூழல் குறித்து நம் அன்புத்தலைவர் (ரஜினிகாந்த்) வெளிப்படையான, தெளிவான அறிக்கை ஒன்றை கொடுத்திருந்தார்.
அதன்பின்னரும் அவரை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபட போவதாக சில ரசிகர்கள் பேசி வருவது அவரை மேலும் நோகடிக்க செய்யும் செயல் ஆகும். இந்த போராட்டத்துக்காக ஒரு சிலர் அதற்கான செலவுகளுக்கு என்று கூறி, நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்ததக்கது. நம் தலைவரின் மீது அன்பும், அவர் நலனில் அக்கறையும் கொண்ட ரஜினி மக்கள் மன்ற காவலர்களும், ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.