தேர்தல் பிரசாரத்துக்காக செல்லும்போது தனி விமானத்தை பயன்படுத்தியது ஏன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன். இதற்காகச் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சேலம் அழகாபுரம் பகுதியில், திறந்தவெளி காரில் நின்று உரையாற்றிய அவர், “தமிழகம் மாற்றத்துக்குத் தயாராகி விட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.
மக்கள் நீதி மய்யம் பல நேர்மையான பல திட்டங்களைக் கொண்டு வரும். அடுத்த பத்தாண்டுகள் தமிழகத்துக்குப் புத்துணர்வு தரும் ஆண்டுகளாக அமையும். இதை நீங்கள் நம்ப வேண்டும்.
இத்தனை கரங்கள் ஒன்றிணைந்தால் நம் கதை தொடங்கும், அவர்கள் கதை முடியும். நாளை நமதே! நிச்சயம் நமதே” என்று கூறினார்.
பின்னர், ஏற்காட்டில் உள்ள தோட்டக்கலை தொழிலாளர்களின் கருத்துகளை கேட்ட அவரிடம், “ஏற்காடு மலைப்பகுதியாக இருந்தாலும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. மேலும், அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார், காவல் துறை கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறது. இதை எல்லாம் மாற்ற வேண்டும்” என்று தோட்டக்கலை சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பாக்கியம், “ஒரு மாதம் பெய்யும் மழையினாலேயே சாலைகள் பாதிக்கப்படுகின்றன.
இதனால் நிறைய விபத்துகள் நடக்கின்றன. வீட்டுக்குப் பட்டாக்கள் வழங்குவதில்லை. இங்கு நல்ல மழை பொழிந்தாலும் தண்ணீர் தேக்கி வைக்கும் அளவுக்கு நீர்த் தேக்கம் எதுவும் இல்லை.
தோட்டக்கலை தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே ஊதியம் வழங்கப்படுகிறது. எங்குப் போனாலும் லஞ்சமாக இருக்கிறது.
இதை எல்லாம் நீங்கள் மாற்ற வேண்டும். இங்குக் காபி போர்டு அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
“தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா?” – கமல் ஹாசன் விளக்கம்
‘தனியார் முதலாளிகள் முடிவை எடுப்பார்கள்’ – விவசாய மசோதாக்களை விமர்சிக்கும் கமல்
மக்கள் ஆதார வசதி கூட இல்லாமல் தவிப்பதைப் பார்த்துப் பார்த்து அலுத்து நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். என்னைப் பார்த்து, நீங்கள் ஹெலிக்காப்டரில் வருகிறீர்கள். நீங்கள் எப்படி அரசு நடத்துவீர்கள்? என்று கேட்கிறார்கள்.
ஐயா, நான் 234 படம் நடித்திருக்கிறேன். அந்த பணத்தை வைத்து 100 கோடி ரூபாயில் சினிமாவும் எடுக்கலாம்.
என்னுடைய மக்களைப் பார்க்க சீக்கிரமாகச் சென்று பார்க்கவும் முடியும். அதற்காகச் செலவு செய்கிறேன்.
நேற்று வரை டீ கடையும், பூக்கடையும் வைத்திருவாங்க இன்று திடீரென்று கோடீசுவரர்களே பார்த்து வியக்கும் அளவுக்குப் பணம் வைத்திருக்கிறார்கள். அது எப்படியென்று யாருமே கேட்கவில்லை. எங்கள் செலவில் நாங்கள் பறக்கிறோம். மக்கள் பணத்தில் பறக்கவில்லை.
கமல்ஹாசன்
எங்களுக்குக் குறிப்பிட்ட நேரமே கொடுக்கப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் சீக்கிரம் மக்களைப் பார்க்க வேண்டும்.
குறுகிய காலத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற குழந்தை நடக்க ஆரம்பிக்கவில்லை, ஓட ஆரம்பித்திருக்கிறது.
இதற்குக் காரணம் நீங்கள் கொடுத்த அன்பும், ஆசியும்தான். இன்னும் கொஞ்ச மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது. அங்கு இந்த மக்கள் பலத்தைக் காண்பித்தால் நல்லாட்சி அமையும்.
இதுவா, அதுவா, காலகாலமாக விசுவாசமாக ஒரு கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்று பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தை மட்டும் செய்து விடாதீர்கள்.
நீங்கள் விசுவாசமாக ஓட்டுப்போட்டதால்தான் அவர்கள் பத்து தலைமுறைக்குத் தேவையான பணத்தைச் சேர்த்து விட்டார்கள்.
நீங்கள் உங்கள் தலைமுறையைக் குறித்து யோசியுங்கள். இன்று பலமான மூன்றாவது முகமாக என்னை நீங்கள் மாற்றியிருக்கிறீர்கள்.
அந்த பலத்தை அதிகார பலமாக மாற்றிக்காட்டுங்கள். பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு என எதுவுமே இல்லாமல் இருக்கிறது. அதை மாற்றிக்காட்ட என வாய்ப்பளியுங்கள்” என்று கமல்ஹாசன் பேசினார்.