: ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டம்
02 Jan,2021
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றப்போது, அதில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
அப்போது ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் கூட ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காணப்பட்டது. ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்ததால் அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டார். ரஜினி தொடர்ந்து 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் சூழலுக்கு அவர் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ரஜினிகாந்த் ஏற்கனவே அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர். பொதுவாக இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சாதாரணமாகவே நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.
கொரோனா தொற்று தாக்கும் அபாயம் மிக அதிகம். எனவே தான் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் முடிவில் இருந்து பின்வாங்கினார். இந்நிலையில் ரஜினிக்கு தொடர்ந்து மனச்சோர்வு பிரச்சினை இருந்துவருகிறது என்கிறார்கள்.
ரஜினியின் அரசியல் முடிவுக்கு ரசிகர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ரஜினியின் ஆதரவாளர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது வீட்டின் முன்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமூகவலைதளங்களிலும் பல்வேறு எதிர்ப்பு பதிவுகள் எழுந்துள்ளன. இதனால் ரஜினி கடந்த சில நாட்களாக மனச்சோர்வு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உடல்நல பாதிப்பு உள்ள நிலையில் மேலும் மனச்சோர்வு ஏற்படுவதால் சிகிச்சை பெற அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல் பரிசோதனை செய்து கொண்டு, அங்கேயே சில நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். சென்னையில் சில நாட்கள் இல்லாமல் வேறு இடத்தில் தங்கி இருந்தால் ரஜினியின் மனநிலை ரிலாக்ஸ் ஆகும் என்று குடும்பத்தினர் கருதி இந்த முடிவை எடுத்துள்ளனர். நிறுத்திவைக்கப்பட்டுள்ள அண்ணாத்த படப்பிடிப்பை பிப்ரவரியில் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதற்குள் ரஜினி திரும்பிவிடுவார் என்று கூறப்படுகிறது.