நடிகர் ரஜினிகாந்த் ‘அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ந்தேதியன்று வெளியிடப்படும்’ என்றும் கடந்த 3-ந்தேதி அறிவித்து இருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்கி முடித்துவிடும்படி படக்குழுவினரிடம், ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து கடந்த 14-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த படக்குழுவில் இருந்த ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது அதாவது ‘நெகட்டிவ்’ என்று தெரியவந்தது. இருந்தபோதிலும் ரஜினிகாந்த் ஐதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதற்கிடையே ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த 25-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் அவருடைய உடல்நலம் நன்கு தேறியுள்ளது. 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்தடைந்தார். ரஜினிகாந்த் உடன் அவருடைய மகள் சவுந்தர்யா காரில் அமர்ந்திருந்தார்.
ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், அடிக்கடி ரத்த அழுத்தத்தை கண்காணித்துக்கொண்டு, ஒரு வார காலத்துக்கு வீட்டில் முழு ஓய்வில் இருக்கவேண்டும். உடல் ரீதியான குறைந்தபட்ச செயல்பாடு இருக்கவேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்கவேண்டும்.இந்த நிபந்தனைகளோடு, கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் அவர் தவிர்க்கவேண்டும் என்று ரஜினிகாத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நிறுத்தப்பட்ட அண்ணாத்த பட ஷூட்டிங் மீண்டும் துவங்குவதில் சிறிது கால தாமதம் ஏற்படும் என்றும், பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஷூட்டிங் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதுபோல் திட்டமிட்டபடி 31-ம் தேதி புதிய கட்சியை ரஜினிகாந்த் அறிவிப்பாரா? என ரஜினி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
வரும் 31-ம் தேதி ரஜினிகாந்தின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாவதில் எந்த சந்தேகமும் இல்லை என ரஜினி தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
திட்டமிட்டபடி டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பை ரஜினிகாந்தே வெளியிடுவார் எனவும் , கட்சியின் பெயர், சின்னம், கொடி குறித்த தகவலை டுவிட்டர் மூலம் வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் , அர்ஜுன மூர்த்தி ஆகிரோர் சந்தித்து பேசினர்.
உடல்நலம் குறித்து இருவரும் விசாரித்தனர். இதனை அடுத்து நிருபர்களிடம் தமிழருவி மணியன் பேசியதாவது;
திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். கட்சியின் பெயர், சின்னம், கொடி குறித்த அறிவிப்பை டுவிட்டர் வாயிலாக வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தே கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.