: பிரசாத் ஸ்டுடியோவுக்கு சென்று, உடைமைகளை எடுத்துக் கொள்ள, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில், ஒலிப்பதிவு அரங்கை, 35 ஆண்டுகளாக, இசையமைப்பாளர் இளையராஜா பயன்படுத்தி வந்தார். ஒலிப்பதிவு அரங்கை காலி செய்யும்படி, ஸ்டுடியோ நிர்வாகம் கேட்டது. உடன்பாடு ஏற்படாததால், சிவில் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில், வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியும், உடமைகளை எடுத்து செல்லவும், ஒரு நாள் ஒலிப்பதிவு
அரங்கில் தியானம் செய்ய அனுமதிக்க கோரியும், உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடுத்தார்.இவ்வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. இளையராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சஜீவ்குமார்; பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர்கள் இளம்பாரதி, அப்துல் சலீம் ஆஜராயினர்.வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து, இளையராஜா தரப்பில், 'மெமோ' தாக்கல் செய்யப்பட்டது.
சினிமா துறையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இளையராஜா, எப்போதும் வார்த்தை தவறியது இல்லை எனவும், அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.இதையடுத்து, ஒரு நாள் மட்டும் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணிக்குள், பிரசாத் ஸ்டுடியோவுக்குள் சென்று, தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துக் கொள்ளவும், இளையராஜாவுக்கு அனுமதி அளித்து, நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
அவருடன், ஒரு உதவியாளர் மற்றும் இசை கலைஞர் உதவியாளரும் செல்லவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.உடைமைகளை எடுக்கும் தேதி குறித்து, இருதரப்பு வழக்கறிஞர்களும் பேசி முடிவு செய்து கொள்ளவும், இந்த நடைமுறைகளுக்காக வழக்கறிஞர் லட்சுமி நாராயணனை கமிஷனராக நியமித்தும், நீதிபதி உத்தரவிட்டார்.இளையராஜா வரும் தினத்தில், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.