– ஓவியா கருத்துக்கு சிநேகன் மதுமிதா கூறுவது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஓவியா, அந்த நிகழ்ச்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்தொன்றைத் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
ஜுலை 26ஆம் தேதி இரவு அவர், “பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஓவியா.
அப்போது ஒருவர், “ஆம், தடை செய்ய வேண்டும்,” என ஓவியா ட்விட்டுக்கு பதிலளித்து இருந்தார்.
டி.ஆர்.பிக்காக சித்ரவதை
இதற்கு பதில் அளித்த ஓவியா, “தற்கொலை செய்து கொள்ளும் வரை டிஆர்பிக்காக போட்டியாளர்களைச் சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்,” என கூறி இருந்தார்.
மற்றொருவர், “விளம்பரத்துக்காக, பணத்திற்காக தெரிந்துதானே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறீர்கள். ஏன் நீங்கள் ஒப்பந்தத்தை முழுமையாக படித்து, அதனை மதிப்பிட்டு பின்னர் பங்கேற்க கூடாது?,” என கூறிந்தார்.
இதற்கு பதில் அளித்த ஓவியா, “ஒருவருக்கு மன உளைச்சல் தருவதற்கான உரிமம் அல்ல அந்த ஒப்பந்த படிவம். கொஞ்சம் கருணை காட்டுங்கள்,” என்று தெரிவித்து இருந்தார்.
இன்னொரு சுஷாந்த்தை தமிழகத்தில் காண விரும்பவில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.
‘தெரிந்துதான் செல்கிறோம்’
இது தொடர்பாக கருத்து பெற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுடன் பங்கேற்ற சிநேகனிடம் பேசினோம்.
அவர், “அந்த விளையாட்டே அப்படித்தான். மன உளைச்சலை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் அந்த நிகழ்ச்சியின் மையக்கரு. இதற்கான ஒப்பந்தத்தில் இது குறித்து அனைத்தையும் விரிவாக தெரிவித்து இருப்பார்கள். அது தெரிந்துதான் நிகழ்ச்சியில் பங்கேற்கிறோம்,” என்கிறார்.
மேலும் அவர், “வெளியில் நமக்கு உள்ள அனைத்து செளகர்யங்கள், சுதந்திரம் அனைத்தையும் பிக்பாஸ் வீட்டில் கிடைக்காது. இதனால் நமக்குள் ஓர் அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தத்தை எப்படி கடக்கிறோம் என்பதுதான் அதில் உள்ள போட்டியும், சுவாரஸ்யமும்,” என்கிறார் அவர்.
மதுமிதா என்ன சொல்கிறார்?
பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்ட மதுமிதா தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார்.
சக போட்டியாளர்களின் இந்த நடவடிக்கையை நிறுவனமோ, நிகழ்ச்சித் தொகுப்பாளரோ (கமல்ஹாசன்) கண்டிக்கவில்லையென்றும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக தான் அந்தப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் என்றும் மதுமிதா அந்த சமயத்தில் அவர் கூறியிருக்கிறார்.
ஓவியாவின் ட்விட்டர் பதிவு தொடர்பாக கருத்து பெற மதுமிதாவை தொடர்பு கொண்டோம். இது தொடர்பாக இப்போது கருத்து கூற விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.
பிக் பாஸ்: மதுமிதா தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள யார் காரணம்?
“சக போட்டியாளர்கள் என்னை துன்புறுத்தினார்கள்; கமல் கண்டிக்கவில்லை”
மிருகங்களைப் போல
இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிக மோசமானவை என்று கடந்த ஆண்டு பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளரும் ஆய்வாளருமான ராஜன் குறை தெரிவித்து இருந்தார்.
“மனித உணர்வுகளை எங்கே micro management செய்ய ஆரம்பிக்கிறார்களோ, அப்போதே அது மோசமான விஷயமாகிவிடுகிறது. ஒரு மனிதரை ஒரு கேமராவுக்கு முன்பாக இயல்பாக இருக்கச் சொன்னாலே இருக்க முடியாது. இத்தனை கேமராக்களுக்கு முன்பாக எப்படி இயல்பாக இருக்க முடியும்? இது மிகப் பெரிய மன அழுத்தத்தை பங்கேற்பாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் ஏற்படுத்தும்” என்றார் ராஜன் குறை.
இது மனிதர்களை, மிருகங்களைப் போல நடத்துவதற்கு இணையானது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
முதன் முதலில் நெதர்லாந்தில் பிக் பிரதர் என்ற பெயரில் 1999 செப்டம்பரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்தது.
ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலில் வரும் பிக் பிரதர் எல்லோரையும் கண்காணிப்பதுபோல, வீட்டில் இருப்பவர்கள் பல கேமராக்களால் கண்காணிக்கப்படுவதால் நிகழ்ச்சிக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஜான் தே மால் ஜூனியர் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்தார். இந்த நிகழ்ச்சியின் சர்வதேச உரிமம் நெதர்லாந்தின் என்டேமால் ஷைன் குழுமத்திடம் இருக்கிறது.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இந்தியாவில் மிகவும் பிரபலம்.
இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கப்பட்டது.
தமிழில் 2017-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ‘பிக் பாஸ்’ ஒளிப்பரப்பானது. கமல் தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் 1 சீசனில் சிநேகன், ஓவியா, ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, சுஜா வரூணி, வையாபுரி, காஜல் பசுபதி, ரைஷா வில்சன், காயத்ரி ரகுராம், உள்ளிட்ட போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த ஓவியாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் எல்லாம் தொடங்கப்பட்டன.