இனி படப்பிடிப்பு பெரிய சவாலாக இருக்கும் - நாசர்
01 Jul,2020
கொரோனா ஊரடங்கினால் சினிமா உலகத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள். திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். சினிமா படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றும், தியேட்டர்களை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் தற்போது அதற்கு சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. திரையுலகம் டிசம்பர் மாதம்தான் பழைய நிலைக்கு திரும்பும் என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது: கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. 3 மாதங்களுக்கு மேலாக எந்த திரைப்பட பணிகளும் நடக்கவில்லை. சினிமா படப்பிடிப்புகளை மீண்டும் எப்படி நடத்துவது என்பதும் தியேட்டர்களை திறப்பதும் பெரிய சவாலாகவே இருக்கும். திரையுலகம் பழைய மாதிரியான நிலைக்கு திரும்புவதற்கு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரை ஆகலாம் என்று கருதுகிறேன்.
தற்போதையை சூழ்நிலையில் நடிகர்கள் பலர் சம்பளத்தை குறைப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். நடிகர்கள் சம்பள குறைப்பு செய்வது வரவேற்கத்தக்கது. நானும் கபடதாரி படத்துக்கு சம்பளத்தை குறைத்து இருக்கிறேன். ஸ்ரீபிரியா இயக்கிய யசோதா என்ற குறும்படத்தில் நடித்துள்ளேன். வீட்டில் இருந்தபடியே இதில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. இவ்வாறு கூறினார்.